மரக்கன்றுகள் நடும் திட்டம் கல்வி துறைக்கு உத்தரவு
பெங்களூரு: கர்நாடக அரசு, நடப்பாண்டு பட்ஜெட்டில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ், பள்ளி, கல்லுாரி சுற்றுப்பகுதிகளில், 50 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும்.இது குறித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:வனத்துறை, கல்வித்துறை சேர்ந்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பயன்படும் மரக்கன்றுகளை வனத்துறை இலவசமாக வழங்கும். அரசு தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகள் வளாகத்தில், சுற்றுப்பகுதிகளில் நட்டு, பராமரிக்கும் பொறுப்பை ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், கிராமங்களின் வன கமிட்டியினர் ஏற்க வேண்டும்.தொடக்க பள்ளி மாணவர்கள், நடுவது, தண்ணீர் ஊற்றுவது போன்ற சிறு பணிகளை செய்ய வேண்டும், மரக்கன்றுகள் நட பள்ளம் தோண்டும் பணிகளை, ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் செய்யலாம். பள்ளியின் இட வசதி அடிப்படையில், அதிகபட்சம் 50 மரக்கன்றுளை மட்டும் நட வேண்டும்.இரண்டு மரக்கன்றுகளுக்கு இடையே, குறைந்தபட்சம் 5 அடி இடைவெளி இருக்க வேண்டும். சுவர்கள், கட்டடங்களில் இருந்து, 5 அடி தொலைவில் நட வேண்டும். கட்டட பணிகளுக்கு, அடையாளம் காணப்பட்ட இடங்களில், நடக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.