அரசு கல்லூரியின் ஆய்வக வசதிகளைக் கண்டு பிரமிப்பு!
கோவை: குஜராத் மாநிலத்தின் கட்சு பல்கலை மாணவர்கள் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்களுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கலந்துரையாடல் நடத்தினர். குஜராத் கட்சு பல்கலையில் எம்.எஸ்சி., விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பு படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், வட மாநிலங்களில் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வின் ஒருபகுதியாக சைலன்ட்வேலி, ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் சரணாலயத்தை(சக்கான்) பார்வையிட்ட இக்குழுவினர், கோவை அரசு கலைக் கல்லூரிக்கு நேற்று வருகை தந்தனர். கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் சேகர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர். விலங்கியல் துறை ஆய்வகத்தை பார்வையிட்ட மாணவர்கள் பிரமிப்பு அடைந்தனர். கல்லூரியின் வரலாறு, சாதனைகள் பற்றி அவர்களுக்கு விலங்கியல் துறை பேராசிரியர்கள் விளக்கினர். குழுவின் தலைவர் முருகேச திரிவேதி கூறுகையில், “ஆய்வுப் பணி தொடர்பாக பல்வேறு கல்லூரிகளை பார்வையிட்டுள்ளோம். ஆனால் வசதியுள்ள பெரிய கல்லூரிகளை விட கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள ஆய்வக வசதிகள் ஆச்சரியப்படுத்துகின்றன. அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு உதவுவதாக இங்குள்ள ஆராய்ச்சிப் பணிகள் உள்ளது,” என்றார். கலந்துரையாடலுக்குப் பின் இக்குழுவினர் ஊட்டி, டாப் ஸ்லிப் பகுதிகளை பார்வையிட புறப்பட்டுச் சென்றனர்.