தமிழ் செம்மொழி மாநாட்டில் இணையதள ஓவியப் போட்டி
கோவை: தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு இணையதள ஓவியப் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டி தொடர்பாக தமிழகம் முழுதும் உள்ள பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு ஜன. 28ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது. கம்ப்யூட்டரில் ‘பெயின்ட் பிரஷ்’ உத்தியை பயன்படுத்தி இப்போட்டி நடத்தப்படவுள்ளது. திருக்குறள், ஆத்திச்சூடி, பழமொழிகள் ஆகிய மூன்றில் ஒரு பாடலை வரைகலை படக்காட்சியாக வரைய வேண்டும். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அசைநிலை(அனிமேஷன்) போட்டிகளும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பாரதியார், பாரதிதாசன், முதல்வர் கருணாநிதி ஆகியோரின் படைப்புகளில் ஏதாவது ஒரு பாடலை படக்காட்சியாக, அசைநிலை ஓவியமாக வரைய வேண்டும். தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் பிப். 12ல் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளின் இறுதிச்சுற்று, மாநில அளவில் நடத்தப்படும். சுமார் 8,000 பள்ளிகளில் இருந்து ஏறத்தாழ 15,000 மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்பர் என பள்ளிக் கல்வித் துறை கணித்துள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு, கோவையில் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் இணைய மாநாட்டில் லேப் டாப், கேமரா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கம்ப்யூட்டர் ஓவியப் போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்வது தொடர்பாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 95 ஓவிய ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் தலைமையில் ஏற்கனவே மாநில அளவில் பயிற்சி பெற்ற ஐந்து கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். முன்னதாக, பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி விளக்கினார். இன்று மெட்ரிக் பள்ளிகளின் ஓவிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்துள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, போட்டியில் பங்கேற்க தயார்படுத்தவுள்ளனர்.