அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க புதுமுயற்சி!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் வகையில், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினரின் முயற்சியால் இதுவரை, 100 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி, துவக்கப் பள்ளி என, மொத்தம் 1,624 பள்ளிகள் உள்ளன.இதில், 106 மேல்நிலை, 157 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. 2022ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம், 93.60 சதவீதமாக இருந்த நிலையில், 2023ல் 92.47 ஆக குறைந்து விட்டது.இதில், அரசு பள்ளிகளில் மட்டும், 84 சதவீதத்திற்கும் குறைவாகவே தேர்ச்சி விகிதம் உள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம், நடப்பாண்டிற்கான பொதுத் தேர்வு துவங்க உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, சிறப்பு வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் பிரபுசங்கர் புதிய முயற்சி எடுத்துள்ளார். முதற்கட்டமாக, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தியதில், பள்ளிகளில் சேரும் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், பொதுத் தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்கின்றனர் என்ற விபரம் தெரியவந்தது.இதையடுத்து, அரையாண்டு தேர்வுக்கு பின் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் இருப்போரை கண்டறிய, 14 ஒன்றியங்களிலும் மூன்று அடுக்கு குழு ஏற்படுத்தப்பட்டது.முதல் குழுவில், பள்ளி அளவில் வி.ஏ.ஓ., தலைமையாசிரியர், ஊராட்சி தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அடங்குவர். இரண்டாம் குழு, ஒன்றிய அளவில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் தாசில்தார் உள்ளனர்.மூன்றாவது குழுவில், கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளனர்.இதுதவிர, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களையும், இடைநின்ற மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு, மாணவர்கள், அவரது பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இதன் பலனாக, அரையாண்டு தேர்வு எழுதிய பின், இதுவரை, 566 பேர் பள்ளிக்கு வராமல் நின்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து செய்முறைத் தேர்வு மற்றும் மார்ச் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் பங்கேற்க வைக்க, மூன்று அடுக்கு குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் பயனாக, கடந்த 13ம் தேதி வரை, இடைநின்ற 100 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 12ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கிய நிலையில், இடைநின்ற மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.இம்மாத இறுதிக்குள் இடைநின்ற அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்த்து பொதுத் தேர்வு எழுதும் வகையில் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.