இலவசங்கள், பரிசுகள் தரக்கூடாது; மருந்து நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு
புதுடில்லி: மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக, மத்திய அரசு, மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.மருந்து நிறுவனங்கள், சுகாதார வல்லுனர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினருக்கு, இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடை விதிக்கும் வகையில், மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறையை அரசு வெளியிட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:சுகாதார வல்லுனர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினருக்கு, மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜன்ட்கள், எந்த பரிசும் வழங்க கூடாது. ஒரு சுகாதார வல்லுனரை அணுகுவதற்கு, அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்க கூடாது. மருந்துகளை பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு, இலவச மாதிரிகள் வழங்க கூடாது.மருந்து நிறுவனங்கள் அல்லது அதன் பிரதிநிதிகள், தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்தவொரு விருந்தோம்பலையும், சுகாதார வல்லுனர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கக் கூடாது.கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் சுகாதார வல்லுனர்கள் பங்கேற்பதற்கு, உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை, மருந்து நிறுவனங்கள் வழங்க கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.வழங்க கூடாதவை* இலவச பரிசுகள்* பயண வசதிகள்* இலவச மருந்து மாதிரிகள்* விருந்தோம்பல்