தேசிய எம்.டி.பி., சைக்கிளிங் கோவை மாணவர்கள் அசத்தல்
கோவை: ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான மவுண்டைன் பைக் சாம்பியன்ஷிப் (எம்.டி.பி.,) போட்டியில், கோவை மாணவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்று அசத்தினர்.இந்திய சைக்கிளிங் சம்மேளனத்தின், 20வது தேசிய எம்.டி.பி., சைக்கிளிங் போட்டி ஹரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று, சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் போட்டியிட்டனர்.இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற, கோவையை சேர்ந்த மாணவர்கள் டைம் டிரையல் மற்றும் மாஸ் ஸ்டார்ட் பிரிவுகளில் 4 தங்கம், 4 வெண்கலம் என எட்டு பதக்கங்கள் வென்றனர். சப்-ஜூனியர் பிரிவில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டிச்சென்றது.14 வயது மாணவியர் பிரிவில், ஹாசினி டைம் இரண்டு தங்கம், ஸ்மிருதி இரண்டு வெண்கலம்; 14 வயது மாணவர்கள் பிரிவில் பிரணேஷ் இரண்டு தங்கம் மற்றும் 16 வயது மாணவியர் பிரிவில் சவுபர்ணிகா, இரண்டு வெண்கலம் வென்றனர்.வெற்றி பெற்றவர்களை, தமிழ்நாடு சைக்கிளிங் சங்க தலைவர் சுதாகர், செயலாளர் விக்னேஷ் குமார் ஆகியோர் பாராட்டினர்.