மதுரையில் வேகமாக பரவுது வைரஸ் காய்ச்சல்!
மதுரை: கடந்த வாரம் வரை கொளுத்தும் வெயிலால் மக்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து ஹீட் ஸ்ட்ரோக் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் வகையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு, சர்க்கரை கலந்த பாக்கெட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.கடந்த 5 நாட்களாக மழையும் வெயிலும் மாறி மாறி தாக்கியதால் மண்ணில் இருந்த வைரஸ் கிருமிகள்உயிர் பெற்றன. இதனால் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் மதுரையில் மீண்டும் ஆரம்பித்துள்ளது.நேற்று முன் தினம் 7 பேருக்கும், நேற்று 9 பேருக்கும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மே 1 முதல் 2 பேருக்கு டெங்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தனர். மதுரையில் டெங்கு காய்ச்சல் இல்லை.அடுத்தடுத்து மழை பெய்யும் போது மண்ணிலுள்ள வைரஸ் கிருமிகள் உயிர்பெற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர் டாக்டர்கள்.அவர்கள் கூறியதாவது:மழை பெய்யும் போது வைரஸ் காய்ச்சலின் தீவிரத்தை தடுக்க முடியாது. காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்வது அவசியம். கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து போதிய ஓய்வெடுக்க வேண்டும். தொடர் மழை பெய்யும் போது வீடு, சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி செய்ய வேண்டும்.தேங்கிய மழைநீரில்விரைவில் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து அதிகளவில் உற்பத்தியாகும். இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.காலை, மாலையில் மனிதர்களை கடிக்கும் கொசுக்கள் டெங்கு வைரஸ் பரப்புபவை என்பதால் எச்சரிக்கை தேவை. தொடர் காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். கை வைத்திய முறையில் மருந்துகளை எடுக்கக்கூடாது என்றனர்.