உள்ளூர் செய்திகள்

காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரதம்

சென்னை : மக்கள் நல்வாழ்வுத் துறையில் உள்ள, 3,500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நடந்த போராட்டத்திற்கு, சங்க மாநிலத் தலைவர் இந்திரா தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற சுகாதார செவிலியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.பின், இந்திரா கூறியதாவது: மக்கள் நல்வாழ்வுத் துறையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பதவி உயர்வு, பணி நியமனம், நியமனத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டை களைதல், கொரோனா கால ஊக்கத்தொகை 15,000 ரூபாய் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.ஆனால், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. செவிலியரின் பிரதானப் பணிகளில், மாணவர்கள், பொதுமக்கள் இடையே, 'நலக்கல்வி' வழங்குவது முக்கியமானது.தற்போது துறையில், 3,500க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளதால், நலக்கல்வி வழங்க நேரம் இல்லை. அதேபோல், மகப்பெறு நிதியுதவி திட்டத்தை இணையவழியில் மேற்கொள்வதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, இத்திட்டத்தை மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்ற வேண்டும்.மக்கள் நல்வாழ்வுத் துறையில், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், இணைய வழி பணிகளை செய்ய, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்