அனைவருக்கும் ஐ.ஐ.டி. திட்டம்; கோவை மாணவர்களுக்கு வாய்ப்பு
கோவை: அனைவருக்கும் ஐ.ஐ.டி.திட் டத்தில், சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ்.டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர, சென்னை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, சேலம், சிவகங்கை, வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 28 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.கோவையில் இருந்து நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 படிக்கும் அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ணிகா ஸ்ரீ, தம்பு மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஹார்திகா மற்றும் ருஜித்ரா, அரசு பள்ளிகளில் பயின்று, தற்போது கல்லுாரியில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களான விஜய், ஹரிஷ், முகமது தஸ்னீம், சுதர்சன் மற்றும் சுஜித் என எட்டு பேர், இப்படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் ஜே.இ.இ. மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள் எழுதியவர்கள்.தேர்வு முறை இத்திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்ய, கோவையில் உள்ள 80 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து, 20 மதிப்பெண்களுக்கான தேர்வு, பள்ளிகளில் நடத்தப்பட்டது.இதில், 140 மாணவர்கள் அடுத்த நிலைக்கு தேர்வாகினர். அவர்களுக்கு, 'வாட்ஸ் அப்' குழு மூலம் தொடர் வகுப்புகள், 'அசைன்மென்ட்' வழங்கி, ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட, தகுதி தேர்வில், தற்போது பிளஸ் 2 படிக்கும் மூன்று மாணவியர் தேர்வாகினர்.இவர்கள் அடுத்த கல்வியாண்டில், இப்படிப்பில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களின் கல்வி செலவில் 75 சதவீதத்தை, சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும், மீதமுள்ள தொகையை அரசும் ஏற்கும்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இனி வரும் காலங்களில் மாவட்டத்தில் இருந்து அதிக மாணவர்கள், இத்திட்டத்தில் சேரும் வகையில், மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் மாவட்டத்தில், 98.5 ஆக உயர்ந்துள்ளது' என்றார்.