ஆசிரியர்களை கைவிட மாட்டோம் அமைச்சர் மகேஷ் உறுதி
திருச்சி: ''எந்தக் காரணத்தை கொண்டும் ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது,'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.தமிழக முழுதும், 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. திருச்சி, கே.கே.நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியும், மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.இந்த பள்ளியில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:பணியில் உள்ள ஆசிரியர்கள், 'ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்தவுடன், சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, இது குறித்து மேல்முறையீடு செய்யப்படும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம். எந்த காரணத்தை கொண்டும், தமிழக அரசு, ஆசிரியர்களை கைவிடாது.இவ்வாறு அவர் கூறினார்.