தனியார் சார்பில் முதன்முறையாக ராக்கெட் தயாரிப்பு அபாரம்
ஹைதராபாத்: நம் நாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் முதன்முறையாக, புவி சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 'விக்ரம் - 1' ராக்கெட்டை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 'ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் விண்வெளித் துறையில் கால் பதித்துள்ளது.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் பவன் சந்தனா மற்றும் பரத் தாகா இணைந்து, முன்னோடியான இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கிஉள்ளனர்.கடந்த 2022 நவம்பரில், 'விக்ரம் - எஸ்' என்ற ராக்கெட்டை புவி சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகே ஏவி, விண்வெளிக்கு ராக்கெட் ஏவிய இந்தியாவின் முதல் தனியார் நிறுவனம் என்ற வரலாற்று சாதனையை படைத்தது.தற்போது புவி சுற்று வட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் வகையில் விக்ரம் - 1 ராக்கெட்டை மேம்படுத்திஉள்ளது. விக்ரம் - 1 பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று இந்த தனியார் ராக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தார்.நம் நாட்டின் விண்வெளித் துறையில் முன்னோடியாக திகழும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக, இந்த ராக்கெட்டுக்கு விக்ரம் - 1 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ராக்கெட், 60 அடி உயரம், 5 அடி சுற்றளவுடன், குறைந்தஎடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, 350 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் படைத்தது.ஒரே ஏவுதலில், ஒன்றுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில், அடுத்தடுத்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டது. இதற்காக, பாதையில் இருந்து ராக்கெட் விலகிச் சென்றால், உடனடியாக அதை சரிசெய்யும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.மொத்தம் நான்கு கட்டங்களாக, விக்ரம் - 1 ராக்கெட்டின் உந்து விசை அமைப்பு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டத்தை 'கலாம் - 1200' என்ற பெயரில் அழைக்கின்றனர். இதில், கார்பன் பைபரில் தயாரிக்கப்பட்ட 30 அடி நீளம் கொண்ட திட எரிபொருள் ராக்கெட் மோட்டார் இருக்கும்.ராக்கெட் ஏவும்போது உடனடியாக சீறிப்பாயும் வகையில், இலகுரக எடையில் அந்த மோட்டார் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, ராக்கெட் விண்வெளிக்கு சீறிப்பாய உதவும் வகையில், 120 டன் அளவுக்கு உந்து விசையை உற்பத்தி செய்யும்.இரண்டாம் கட்டத்திற்கு 'கலாம் - 250' என பெயரிடப்பட்டுள்ளது. இதிலும் திட எரிபொருள் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ராக்கெட் நடுவானில் பறக்க ஏதுவாக, எரிபொருளை எரித்து உந்துவிசையை அளிக்கும்.தொழில்நுட்பம் மூன்றாம் கட்டத்தின் பெயர் கலாம் - 100. இது, 100 கிலோ நியூட்டன் உந்துவிசையை வழங்குகிறது. இதனால், தீவிர வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க 'கார்பன் அபிலேட்டிவ்' என்ற தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.இது, உந்துவிசையின்போது அதிக நெருப்பு வெளியேறும் சமயத்தில் மோட்டாரை பாதுகாக்க ரப்பர் தடுப்பான் போல செயல்படும். நான்காம் கட்டம், நான்கு ராமன் இன்ஜின்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு இன்ஜினும் 3.4 கிலோ நியூட்டன் உந்து சக்தியை வெளிப்படுத்தும்.இந்த கட்டம் தான், எந்த சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும். சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை துல்லியமாக நிலைநிறுத்த ராக்கெட்டை திருப்புவதற்கான தொழில்நுட்பம் இந்த நான்காம் கட்டத்தில் தான் புகுத்தப்பட்டுஉள்ளது.அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரம் - 1 ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப ஸ்கைரூட் திட்டமிட்டுள்ளது.பிரதமர் பெருமிதம்'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக 'விக்ரம் - 1' ராக்கெட்டை அறிமுகம் செய்து வைத்த பின், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு வளர்ச்சி பெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இத்துறையில் கால் பதித்து இருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே, வருங்காலம் நம் இளைஞர்களுக்கானது. நம் நாட்டின் விண்வெளித் துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதால், தனியார் நிறுவனங்கள், புத்தாக்க முயற்சிகளுடன் களமிறங்கி உள்ளன. ஸ்கைரூட் நிறுவனத்தின் இன்பினிட்டி கேம்பஸ், நம் நாட்டின் புத்தாக்க சிந்தனை மற்றும் புதுமைகளை பிரதிபலிக்கிறது. வளமான இளைஞர்களின் ஆற்றலையும் எதிரொலிக்கிறது. நம் நாட்டின் விண்வெளித் துறை, உலக நாடுகளை ஈர்க்கும் அளவுக்கு தற்போது வளர்ந்து இருக்கிறது. இத்துறையில் தனியார் நிறுவனங்களின் திறனும், சர்வதேச அளவில் புதிய அடையாளத்தை உருவாக்கி உள்ளது. விண்வெளித் துறையில் புதிய தொழில்நுட்பங்களை, நம் நாட்டின் இளைஞர்கள் திறம்பட உருவாக்கி வருகின்றனர். இனி வருங்காலம் அவர்களுக்கானது. அணுசக்தி துறையிலும் தனியாரை அனுமதிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.