யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் முக அங்கீகார சோதனை
புதுடில்லி: யு.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு முக அங்கீகாரம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து யு.பி.எஸ்.சின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:கடந்த 2025ம் ஆண்டு செப்.,ல் நடத்தப்பட்ட இரண்டு தேர்வுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் முக அங்கீகார சோதனை, தேசிய மின் ஆளுமை பிரிவு உதவியுடன் நடத்தப்பட்டது.ஹரியானாவின் குருகிராமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இந்த முன்னோடித் திட்ட சோதனை நடத்தப்பட்டது. அங்கு தேர்வர்களின் முகப்படங்கள், அவர்கள் படிவங்களில் சமர்ப்பித்த புகைப்படங்களுடன் டிஜிட்டல் முறையில் ஒப்பிடப்பட்டன. இந்த புதிய அமைப்பு, சரிபார்ப்பு நேரத்தை ஒரு தேர்வுக்கு சராசரியாக 8 - 10 வினாடிகளாகக் குறைத்தது.இந்த புதிய அறிவிப்பின்படி, எதிர்காலத் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்கள் தேர்வு மையங்களில் முக அங்கீகார சோதனைக்கு உட்பட வேண்டும். இந்த முயற்சி தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும், தேர்வு மையங்களில் தேர்வர்கள் நுழைவதை எளிதாக்கவும் முயல்கிறது என யு.பி.எஸ்.சி., கூறி உள்ளது.100 ஆண்டுகள் பழமையான யு.பி.எஸ்.சி., நாடுமுழுவதும் 180 மையங்களில் உள்ள சுமார் 3,000 இடங்களில் 12 லட்சம் வரையிலான தேர்வர்களுடன் 14 முக்கிய தேர்வுகள் மற்றும் பல ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை நடத்தி வருகிறது.கடந்த 2024ல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விதிகள் திருத்தப்பட்டன. முன்னர் ஒரு வேட்பாளர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றவுடன் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றப்பட வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது புதிய விதியின் படி கல்வி, சாதி மற்றும் உடல் குறைபாடு சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பது ஆரம்பகட்டத் தேர்வுகளின் போதே கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.