மருத்துவ டிப்ளமோ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்
சென்னை: மருத்துவம் சார்ந்த டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான, ‘கவுன்சிலிங்’ நேற்று துவங்கியது. தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். மருத்துவக் கல்வி இயக்கத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டு, மருத்துவம் சார்ந்த குழுமம் மற்றும் தனிச்சின்னம் உருவாக்கப்பட்டது. மருத்துவ கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 2010-11ம் ஆண்டிற்கான 23 வகையான மருத்துவம் சார்ந்த டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கவுன்சிலிங் துவங்கியது. மருத்துவம் சார்ந்த இரண்டு வருட, டிப்ளமா பயிற்சிகளான லேப் டெக்னீசியன், ரேடியோலாஜிகல் டெக்னாலஜி, ஒரு வருட பயிற்சியான, மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் சயின்ஸ், இரண்டு வருட, நர்சிங் அசிஸ்டென்ட் உட்பட 16 வகையான சான்றிதழ் படிப்புகளுக்கும், ஒற்றை சாளர முறையில் 5,842 இடங்களுக்கு கவுன்சிலிங் துவங்கியது. மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்த முதல் நாள், ‘கவுன்சிலிங்’கில் விண்ணப்பத்தின் படி தேர்வு செய்யப்பட்ட 29 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், 22 மாணவர்கள் நேற்று கலந்து கொண்டு, கல்லூரிகளை தேர்வு செய்தனர். நேற்று முதல் 14ம் தேதி வரை, டிப்ளமா பயிற்சிக்கும், டிச., 15 முதல் 20ம் தேதி, சான்றிதழ் பயிற்சிக்கும், டிச., 21 முதல் 27ம் தேதி வரை, நர்ஸ் உதவியாளர் பயிற்சிகளுக்கும், கவுன்சிலிங் நடக்கிறது. நேற்று நடந்த ‘கவுன்சிலிங்’கை, மருத்துவக் கல்வி இயக்குனர் கனகசபை பார்வையிட்டு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவ, மாணவியருக்கு, கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.