உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் நியமன உத்தரவு வழங்கினார் துணை முதல்வர்

சென்னை: சென்னை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உடல் ஆரோக்கியத்தின் முன்னேற்றத்திற்கும், விளையாட்டுகளில்  திறம்பட பங்கேற்கச் செய்யும் வகையிலும் மற்றும் மாணவர்களின் இசை ஆர்வத்தை வெளிக் கொண்டு வரும் வகையிலும் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர்கள் நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 43 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இசை ஆசிரியர்கள் என 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவு மற்றும் வாழ்த்துக் கடிதங்களை துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 32 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 141 பட்டதாரி ஆசிரியர்கள், 23 இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, 196 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட 46 ஆசிரியர்களையும் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளில் 242 ஆசிரியர்கள் சென்னை பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு... பூந்தமல்லி தொழிற்பயிற்சி மையத்தில், புத்தகம் கட்டும் பயிற்சி முடித்து, வேலை கிடைக்காமல் இருந்த 38 மாற்றுத் திறனாளிகள் அரசு வேலை வாய்ப்புக் கோரி, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, இதில் 33 மாற்றுத் திறனாளிகளை எழுது பொருள் அச்சகத்துறையில் இளநிலை புத்தகம் கட்டுனர் பதவியில் பணியமர்த்த, அனைத்து விதிகளையும் தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளையும் துணை முதல்வர் நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்