மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி ஆசிரியர்களுக்கு சேரும்: சி.இ.ஓ.,
ஈரோடு: "மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி, ஆசிரியர்களுக்கே சேரும்,'' என, பள்ளி விழாவில் முதன்மை கல்வி அலுவலர் பேசினார். ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பாடப்பிரிவு ஆசியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடந்தது. ஈரோடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆங்கிலம், சமூக அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முதன்மை கல்வி அதிகாரி குமார் பேசியதாவது: அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு தேர்வில் தோல்வி ஏற்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. குளத்தில் மூழ்குபவன் நீச்சல் தெரிந்தவனோ; தெரியாதவனோ, ஆனால், காப்பாற்ற வேண்டும் என்று அவனுக்கு நாம் உதவி செய்வது போல், அரசு பள்ளி மாணவனை தேர்வில் வெற்றி பெற வைக்க வேண்டும். அது உயிர்காக்கும் செயலுக்கு இணையானது. அந்த செயலை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவனை வெற்றி பெற வைப்பது, அந்த மாணவன் வாழ்க்கையில் வயிறார உணவு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்த பாக்கியம் ஆசிரியர்களுக்கு கிடைக்கும். ஆசிரியர்களாக நீங்கள் எடுக்கும் முயற்சி, மாணவர்களுக்கு வாழ்க்கை பாதை அமைத்துக் கொள்ள உதவும். கருணை உள்ளத்தோடு ஒவ்வொரு மாணவனையும் அணுக வேண்டும். மனதளவில் ஆசிரியர் மீது மாணவனுக்கு ஈர்ப்பு ஏற்பட வைக்க வேண்டும். மாணவன் ஆசிரியரை பார்க்கும் போது மூத்த சகோதரனை பார்த்த எண்ணம் அவன் மனதில் தோன்ற வேண்டும். கரிசனத்துடன் மாணவனை அணுகினால், அக்கறையுடன் படிக்க துவங்குவான். எல்லோரையும் அன்புடன் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி, ஆசிரியர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.