புதிய பொறியியல் கல்லூரிகளை தடுக்க முடியாது: ஏ.ஐ.சி.டி.இ.,
தமிழகத்தில் தற்போது 491 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு கவுன்சில் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் முடிவில், தமிழக பொறியியல் கல்லூரிகளில், 31 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, பொறியியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருந்து வருகின்றன. இதையடுத்து, அடுத்தாண்டு முதல் தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டாம் என, தமிழக அரசு சார்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க ஏ.ஐ.சி. டி.இ., மறுத்து விட்டதாக தெரிகிறது. டில்லியில் சமீபத்தில் நடந்த ஏ.ஐ.சி.டி.இ., கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய ஏ.ஐ.சி.டி.இ., துணைத் தலைவர் மான்தா, ‘புதிய பொறியியல் கல்லூரி துவங்க அனுமதி கோரி விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்களை சட்டரீதியாக நிராகரிக்க முடியாது. புதிதாக பொறியியல் கல்லூரி துவக்க கூடாது என நாம் யாரையும் தடுக்க முடியாது. விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருந்தால், புதிய கல்லூரி துவங்க அனுமதி வழங்க வேண்டியது தான்’ என்றார். இந்தாண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, ஏ.ஐ.சி. டி.இ., புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. இவை மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அமைச்சக அனுமதிக்கு பின், புதிய வழிமுறைகள் இம்மாத இறுதியில் மத்திய அரசிதழில் வெளியிடப்படும். புதிய வழிமுறைகள் டிசம்பர் இறுதியில் அரசிதழில் வெளியிடப்பட்ட பின், ஜனவரியிலிருந்து புதிய பொறியியல் கல்லூரி துவங்குவதற்கான விண்ணப்பங்களை பெற ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இந்தாண்டு ஆன்-லைன் மூலமாக மட்டுமே புதிய பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பிப்ரவரி இறுதி வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. கடந்தாண்டு கூடுதல் இடம், புதிய பாடப்பிரிவுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, ஆவணங்களை சரிபார்த்து அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் கூடுதல் இடம், புதிய பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு தேவையாக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என, ஏ.ஐ.சி.டி.இ., திடீர் ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஏ.ஐ.சி.டி.இ., திடீர் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஏ.ஐ.சி.டி.இ., டில்லி அலுவலகத்திடம் சமர்பிக்கப்படுகின்றன. ஆய்வு முடிவுகள் குறித்து அடுத்த மாதம் நடக்கவுள்ள ஏ.ஐ.சி.டி.இ., கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கூடுதல் இடம், புதிய பாடப்பிரிவுக்கு அனுமதி பெற்றவர்கள், தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவில்லை என ஆய்வு முடிவில் தெரியவந்தால், குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு வழங்கப்பட்ட அனுமதி முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது. உதாரணமாக, இ.சி.இ., பிரிவில் 60 மாணவர்களை சேர்த்து வரும் கல்லூரி, 120 மாணவர்களை சேர்க்க அனுமதி பெற்றிருந்தால், அதற்குரிய வசதிகள் இல்லாதபட்சத்தில், அடுத்தாண்டு இ.சி.இ., பிரிவில் ஒரு மாணவரை கூட சேர்க்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிடவுள்ளது.