உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையின் நிலம் அண்ணா பல்கலைக்கு ஒப்படைப்பு

கோவை: கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலை கட்ட, பாரதியார் பல்கலை வசமிருந்த 130 ஏக்கர் நிலம், முறைப்படி நேற்று ஒப்படைக்கப்பட்டது; நிலத்தை சுத்தப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம் நேற்று அளித்த பேட்டி: மாவட்டத்தில் 543 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட திட்டப் பணிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. செம்மொழிப் பூங்கா அமைப்பதற்காக, மத்திய சிறை வளாகம் இடமாற்றப்படவுள்ளது. வெள்ளலூரில் புதிதாக மத்திய சிறை வளாகத்தை அமைக்க, 76.88 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது; இதற்கான அரசாணை விரைவில் வரும். அதேபோல, கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு கட்டடம் கட்டுவதற்காக, பாரதியார் பல்கலை வசமிருந்த 130.33 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (நேற்று) காலையில், தமிழக ஊரக தொழில்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில், அந்த இடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது; நிகழ்ச்சியில் இரு பல்கலைகளின் துணைவேந்தர்களும் பங்கேற்றனர். முட்புதர் மற்றும் நிலங்களை சமப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. விரைவில், அந்த இடத்தில் 68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். அண்ணா பல்கலைக்காக எடுக்கப்பட்டுள்ள இடத்துக்கான இழப்பீட்டு தொகையை தமிழக அரசே, நில உரிமையாளர்களுக்கு வழங்கும். இந்த இடத்தை ஒப்படைத்திருப்பதால், பாரதியார் பல்கலையின் எதிர்கால வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படாது. பல்கலை மானியக்குழு விதிகளின்படி, ஒரு பல்கலைக்கழகம் அமைக்க 150 ஏக்கர் இடம் இருந்தால் போதுமானது. ஏற்கனவே சட்டக்கல்லூரிக்கும், தற்போது அண்ணா பல்கலைக்கும் கொடுத்த இடம் போக, பாரதியார் பல்கலைக்கு 600 ஏக்கர் இடம் உள்ளது. இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்