தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை பட்டமளிப்பு விழா
சென்னை: “அனைத்து மருத்துவ, பல் மருத்துவ, நர்சிங் கல்லூரிகளை தர ஆய்வு செய்து, அவற்றிற்கு, ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறினார். சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த அவர் கூறியதாவது: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின், 21வது பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில், நாளை மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடக்கும் விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். பெண்கள் முன்னிலை: விழாவில், 544 பேருக்கு எம்.பி.பி.எஸ்., 17 பேருக்கு பிஎச்.டி., 331 பேருக்கு பி.டி.எஸ்., 1,407 பேருக்கு பி.எஸ்சி., நர்சிங், 1,176 பேருக்கு பி.பார்மசி, 482 பேருக்கு பி.பி.டி., என, மொத்தம், 5,136 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.இதில், 37 சதவீதம் பேர் ஆண்கள்; 63 சதவீதம் பேர் பெண்கள். விழாவில், 6 - 7 மூத்த டாக்டர்களுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. மேலும், மூத்த மருத்துவப் பேராசிரியர்கள், 22 பேர், விழாவில் கவுரவிக்கப்படுகின்றனர். மருத்துவப் படிப்பிற்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் எம்.சி.ஐ.,யின் முயற்சியை பொறுத்தவரை, மாநில அரசின் கொள்கை தான் எங்களது கொள்கை.மாணவர்களுக்கு தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்குவதில்லை என, பல்கலை முன்பு முடிவு செய்திருந்தது. தற்போது, எம்.சி.ஐ., அனுமதித்த அளவிற்கு, 5 சதவீதம் வரை சலுகை மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் தேர்ச்சி விகிதம், பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப, 75 - 90 சதவீதம் வரை உள்ளது. மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, 80 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். தமிழ் இணையக் கழகம், 15 துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்கைளுக்கு, உரிய தமிழ் வார்த்தைகளை தேர்வு செய்து, 15 பகுதிகளைக் கொண்ட தமிழ் அகராதியை உருவாக்கி வருகிறது. இதில் மருத்துவத் துறைக்கான, 17 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட பகுதியை தயாரித்து, தமிழ் இணையக் கழகத்திடம் வழங்கியுள்ளோம். தமிழில் மருத்துவ நூல்களை எழுத முன்வருபவர்களுக்கு, தேவையான நிதி உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளோம். எதிர்காலத்தில், மருத்துவக் கல்வி தமிழ் வழியிலும் கற்பிக்கப்படும் நிலை வரும். பல்கலைக்கு ஐ.எஸ்.ஓ., 9001 சான்றிதழ் வாங்க முயற்சி செய்து வருகிறோம். பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவக் கல்லூரிகள் என, மொத்தம், 320க்கு மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. தனியார் நிறுவனத்துடன் இணைந்து, இக்கல்லூரிகளை தர ஆய்வு செய்து, ஐந்து, நான்கு, மூன்று நட்சத்திரக் கல்லூரி என, ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் தர ஆய்வை மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகளை இறுதி செய்து வருகிறோம். அதன்பிறகு, மூன்று மாதத்தில் தர ஆய்வு செய்யப்பட்டு, கல்லூரிகளுக்கான ரேட்டிங் இறுதி செய்யப்படும். அவை, மாணவர் சேர்க்கைக்கு முன், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு மயில்வாகனன் நடராஜன் கூறினார்.