உயர்கல்வி குறித்த கள ஆய்வுப் பணிகள் மும்முரம்
ஆனால் இந்த சீர்திருத்தங்களை முழுமையாக அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பரந்து விரிவுபட்ட தேச எல்லைகள், மாற்றங்கள் அதிகமுள்ள சமூக, பொருளாதார, கலாச்சார மாறுபாடுகள் போன்றவை நமது நாட்டிற்கே உரித்தானவை. இதனால் உயர்கல்வித்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்த அடிப்படைத் தேவையான தகவல்களை முழுமையாகப் பெறுவது மிகவும் சிரமமான ஒன்றாகவே உள்ளது. இந்தச் சிக்கல்களின் தீவிரத்தை முழுமையாக உணர்ந்த மத்திய மனித வள அமைச்சகம், இந்திய உயர்கல்வி குறித்த தகவல்களை முழுமையாகப் பெறும் நோக்கத்தில் ஒரு கள ஆய்வினை நடத்த முடிவு செய்துள்ளது. இந்தக் கள ஆய்வினை நேஷனல் யுனிவர்சிடி ஆப் எஜூகேஷனல் பிளானிங் அண்டு அட்மினிஸ்ட்ரேஷன் வாயிலாக செய்யவும் முடிவு செய்துள்ளது. உயர்கல்வி குறித்த கள ஆய்வினை ஓர் ஆண்டு கால அவகாசத்தில் நடத்தவும் மத்திய மனித வள அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்திய உயர் கல்வித் துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்து வரும் இந்த சீர்திருத்த நாட்களில் மொத்த சேர்க்கை விகிதம் (கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ) குறித்த அர்த்தமுள்ள முடிவுக்கு வர முடியவில்லை. என்.யு.பி.இ.ஏ., மூலமாக மத்திய மனித வள அமைச்சகம் நடத்தவுள்ள கள ஆய்வில் இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் களப்பணி செய்யப்படும் என்று தெரிகிறது. பல்கலைக் கழகங்கள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழக அளவிலான கல்வி நிறுவனங்கள், மருத்துவம், பொறியியல், டெண்டல், வெர்டினரி, கம்ப்யூட்டர், விவசாயம், நிர்வாகவியல், மருந்தியல், சட்டம், டீச்சர் டிரெய்னிங் போன்ற புரொபஷனல் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் என்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு என்.யு.பி.இ.ஏ., நடத்திய ஆரம்பக் கல்வி குறித்த ஆய்வு அடிப்படையிலேயே இந்த ஆய்வும் நடத்தப்படும் என்று தெரிகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கல்வி நிறுவனங்களின் இணைப்பு நிலை, வழங்கப்படும் படிப்புகள், வருமானம் மற்றும் செலவு, புதிதாக சேருபவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் போன்ற அடிப்படைகளில் ஆய்வு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.