சித்த மருத்துவர்களுக்கு சுவடியியல் பயிற்சி: நவம்பர் 24 முதல்
சென்னை: மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் சித்த மருத்துவர்களுக்காக சுவடியியல் குறித்த 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நவம்பர் 24 முதல் 28 வரை நடைபெற உள்ளது.இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மத்திய ஆராய்ச்சி கவுன்சில், பாரம்பரிய சித்த மருத்துவ இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது.பயிலரங்கில், ஓலைச்சுவடிகளை பாதுகாத்தல், வாசித்தல், பதிப்பித்தல் போன்ற துறைகளில் வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் நேரடி பயிற்சி வழங்கப்படும்.இந்நிகழ்வை கவுன்சிலின் தலைமை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் என்.ஜெ. முத்துக்குமார் தொடங்கி வைத்து, சித்த மருத்துவத்தில் ஓலைச்சுவடி ஆராய்ச்சியின் தேவையைப் பற்றிய முக்கிய உரை நிகழ்த்துவார்.மேலும், சோழிங்கநல்லூர் ஆசியவியல் நிறுவன இயக்குனர் டாக்டர் ஜி. ஜான் சாமுவேல் தலைமை விருந்தினராக பங்கேற்று, தமிழ் ஓலைச்சுவடிகளின் வரலாறு மற்றும் பதிப்பிப்பதின் அவசியம் குறித்து உரையாற்றுவார்.இந்தப் பயிலரங்கு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சித்த மருத்துவர்களுக்கு சித்த இலக்கியங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.