உள்ளூர் செய்திகள்

தொடர் திட்டமின்றி படிப்பை நிறுத்தும் சூழல்

தொடர் திட்டமின்றி படிப்பை பாதியில் நிறுத்தும் சூழல் உள்ளதால், கற்கும் பாரதம் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும், என எதிர்பார்க்கின்றனர். சென்ற 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் எழுத்தறிவில் 50 சதவீதத்துக்கும் குறைவானோர் கொண்ட, ஈரோடு, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம், கற்கும் பாரதம் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம் வரிசையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் படிக்க, எழுத, வாசிக்கத் தெரியும் அளவு இத்திட்டத்தில் கல்வி அறிவு வழங்கப்படுகிறது. மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீத நிதி வழங்கியது. இத்திட்டப்பணி 2010 ஆகஸ்ட் துவங்கி, 2012 மார்ச்சில் முடிவடைகிறது. இத்திட்டத்துக்காக ஈரோடு மாவட்டத்துக்கு ஒன்பது கோடி ரூபாய் நிதி வழங்க திட்டமிட்டு, இதுவரை 1.50 கோடி ரூபாய் வந்துள்ளது. மாவட்டத்தில் பஞ்சாயத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் 230 மையங்கள் உருவாக்கி, ஒரு மையத்துக்கு இரண்டு பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எழுத, படிக்கச் செய்தல், தையல், கைத்தொழில் கற்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயின்றவர்களில் முதற்கட்டமாக 5,011 பேர் தேர்வு எழுதியதில் 4,869 பேரும், மார்ச் 6ம் தேதி 57 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுதியதில், 53 ஆயிரத்து 677 பேரும் தேர்ச்சி பெற்றனர். இத்திட்டத்தில், பயின்று வரும் இரண்டு லட்சத்து 75 ஆயிரத்து 285 கல்லாதவர்களில், 60 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதால், மீதமுள்ளவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வில் மையத்துக்கு 300 பேர் வீதம் 70 ஆயிரம் பேரையாவது குறைந்த பட்சம் தேர்வு எழுத வைக்க முயற்சி நடக்கிறது. இத்தேர்வு முடித்தவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். இவர்களுக்கு தொடர் கல்வி வழங்கி, ஐந்து, எட்டாம் வகுப்பு தேர்வுகள் எழுத வைக்க வேண்டும். ஆனால், இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தாமல் உள்ளது. இதனால், இரண்டாம் வகுப்பு அளவுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொடர் கல்வி, அடுத்த கட்ட நூல்கள் போன்றவை வழங்கப்படவில்லை. இத்திட்டம் 2012 மார்ச்சுக்குப் பின் தொடருமா? என்ற பெரிய கேள்விக்கு மத்தியில், இத்திட்டத்தின் தொடர் பயன், கல்வி அறிவு பெறுவோருக்கு கிடைக்க வேண்டும், என தற்போது இரண்டாம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்