கோவை நோக்கி வரும் பூடான் மாணவர்கள்
இதுதவிர, அந்நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, வணிகவியல், ஐ.டி., உள்ளிட்ட பாடங்களிலும் நடப்பாண்டில் பூடான் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இரு நாடுகளுக்கிடையே நட்புறவு பலப்படக்கூடிய சூழல் உள்ளது. தமிழகத்தில் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் கோவை வேகமாக முன்னேறி வருகிறது. இங்குள்ள கல்லூரிகளில் சிறப்பான கற்பித்தல், ஆய்வுக்கூடம் போன்ற பல வசதிகள் காரணமாக வெளி மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை பெற முன்வருகின்றனர். இந்நிலையில், பூடான் நாட்டை சேர்ந்த மாணவர்களும் இங்குள்ள கல்லூரிகளில் நடப்பாண்டில் கணிசமாக சேர்க்கை பெற்றுள்ளனர். இதற்கு முதல் காரணம் இங்குள்ள சீதோஷ்ணநிலை. அடுத்தபடியாக, தங்கள் இருப்பிடத்துக்கு புதிதாக வருபவர்களிடம் பாரபட்சம் காட்டாமல், தம்முள் ஒருவராக கருதி நட்புணர்வுடன் பழகும் விருந்தோம்பல் பண்பு உட்பட பல்வேறு காரணங்களால் பூடான் மாணவர்கள் தமிழகத்துக்கு முக்கியத்தும் அளிக்கின்றனர். வளர்ந்து வரும் நாடான பூடானில், பள்ளிக்கல்வியை பொறுத்தவரை சிறந்த கற்பித்தல் முறைகள் இருப்பினும், கல்லூரியில் பி.ஏ., கலை இலக்கியம், பி.எஸ்.சி., போன்ற பாரம்பரிய கோர்ஸ்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்பத்துடன் நவீன படிப்புகளை கற்பிக்கும் வசதிகள் குறைவாகவே உள்ளன. குறிப்பாக மீடியா தொடர்பான துறைகளில் பூடான் நாட்டினர் ஜொலிக்க வாய்ப்பே இல்லை. பத்திரிகை, &'டிவி&' தொடர்பாக ஒருசில சானல்களே தற்போது அங்குள்ளன. பொழுதுபோக்கவும் இந்தி (பாலிவுட்) படங்களை மட்டுமே அதிகளவில் பார்த்து ரசிக்க வேண்டியுள்ளது. நிர்வாகத்துறை தொடர்பான பட்டதாரிகளின் பங்களிப்பும் குறைவாகவே உள்ளது. எனவே, அந்நாட்டு அரசின் ஊக்குவிப்புடன் விஷூவல் கம்யூனிகேஷன், காமர்ஸ் மற்றும் ஐ.டி. உள்ளிட்ட கோர்ஸ்களை தேர்ந்தெடுத்து படிக்க பூடான் மாணவர்கள் இங்கு முன்வந்துள்ளனர். கோவை, ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், &'நடப்பாண்டில் கோவையில் மட்டும் இதுவரை 200க்கும் மேற்பட்ட பூடான் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இக்கல்லூரியில் விஷூவல் கம்யூ., பிரிவில் மொத்தமுள்ள 40 இடங்களில், பூடான் மாணவர்கள் 12 பேர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பூடானில் பள்ளிப்படிப்பு மிகவும் நன்றாக உள்ளது. மாணவர்களும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், மேல்படிப்புக்காக சிறந்த கல்லூரிகளோ, பல்கலையோ இல்லை. எனவேதான், தற்போது வளர்ந்து வரும் நாடு விரைவில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில், தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை இங்கு படிப்பதற்காக மாணவர்கள் முன்வந்துள்ளனர். விஷூவல் கம்யூ., துறையிலும் பிற மாநிலங்களை விட தமிழகமே முதலிடத்தில் உள்ளது. மாணவர்களின் வருகை காரணமாக தமிழகம், பூடானுக்கு இடையே நட்புறவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது&' என்றனர். தாய்நாட்டு பற்று : &'தற்போது பூடான் வளர்ந்து வரும் நாடு. நாட்டின் முன்னேற்றத்தில் என்னுடைய பங்கும் கட்டாயமாக இருக்க விரும்புகிறேன். மீடியா துறை மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தும் படைப்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. பாலிவுட் படங்களை தற்போது நாங்கள் அதிகமாக பார்ப்பதால், எங்களிடம் ஒருவித தாக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்காக என்னை சிறந்த முறையில் தயார்படுத்தி, அனைத்து தொழில்நுட்பங்களையும் பழக வேண்டும் என்பதற்காகத்தான் இங்குள்ள கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளேன்&' என்கிறார் பூடான் மாணவி ஜிம்மி வாங்கோ.