உள்ளூர் செய்திகள்

செட் தேர்வில் புள்ளியியல் மாணவர்கள் அதிர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், விரிவுரையாளர் மற்றும் உதவி பேராசிரியர் ஆக பணிபுரிய, மாநில தகுதிகாண் தேர்வு (செட்), தேசிய தகுதிகாண தேர்வு (நெட்) அல்லது பிஎச்.டி., தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. பல்கலை மானியக்குழுவின் அனுமதியுடன், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், கோவை பாரதியார் பல்கலை சார்பில், ஆண்டுக்கு ஒருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களுக்கு, பொதுவாக ஒரே கேள்வித்தாளே வழங்கப்படுகிறது. இரண்டு பாடங்களில் இருந்தும் சரிசமமாக கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம்; ஆனால், நேற்று நடந்த தேர்வில், புள்ளியியல் பாடம் குறித்த கேள்விகள் வெறும் 20 சதவீதம் மட்டுமே கேட்கப்பட்டிருந்ததால், மறு தேர்வு நடத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூறியதாவது, "செட் தேர்வு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கணித அறிவியல் தேர்வில், கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்கள் குறித்த கேள்விகள் சரிசமமாக கேட்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை, 20 சதவீதம் மட்டுமே புள்ளியியல் குறித்த கேள்விகள் இடம் பெற்றிருந்தன. மீதமுள்ள அனைத்து கேள்விகளும், கணிதப் பாடத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. விரிவாக பதில் அளிக்க வேண்டிய 200 மதிப்பெண் கொண்ட மூன்றாம் பகுதியிலும், 30 மதிப்பெண்ணுக்கான கேள்விகளே, புள்ளியியல் தொடர்பாக கேட்கப்பட்டிருந்தன. புள்ளியியல் தொடர்பாக கேட்கப்பட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடை அளித்திருந்தாலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. எனவே, மறு தேர்வு நடத்த, பாரதியார் பல்கலை முன்வர வேண்டும். இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவுக்கு புகார் அளிக்க உள்ளோம்" இவ்வாறு, மாணவர்கள் தெரிவித்தனர். பிரச்னை குறித்து பாரதியார் பல்கலை தேர்வாணையர் செந்தில் வாசனை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறுகையில், "தகுதித் தேர்வு என்பதால், இத்தேர்வில் கேள்விகள் கடினமாக இருக்கும். இதனால் இது போன்ற புகார்கள் வருவது வழக்கம் தான். புள்ளியியல் கேள்விகள் குறித்து இதுவரை எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் புகார் அளித்தால், அதன் அடிப்படையில் பரிசீலனைக் குழுவினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்