மருத்துவ துணை படிப்புகளுக்கு கலந்தாய்வு துவங்கியது
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங், கடந்த மாதம் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. அதில், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன. முதல் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக, பி.எஸ்சி., நர்சிங்(பெண்கள்)- 3,730, நர்சிங்(ஆண்கள்) - 190, பி.பார்ம்., - 1,161 மற்றும் பி.பி.டி., - 657 இடங்கள் காலியாக இருந்தன. இக்காலியிடங்களை நிரப்புவதற்காக, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி கலையரங்கில் நேற்று துவங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கவுன்சிலிங்கில் பங்கேற்க, 162.75 முதல் 132.25 வரை, கட்-ஆப் மதிப்பெண் எடுத்துள்ள விண்ணப்பதாரர்கள் தேதி வாரியாக அழைக்கப்பட்டுள்ளனர். அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்கள், தங்களுக்கான கவுன்சிலிங் தேதியை www.tnhealth.org இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குனர் ஷீலா கூறினார்.