போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு?
ஆசிரியர்கள், போட்டித் தேர்வுகள் மூலமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு சூசகமாக அறிவித்துள்ளது. முதல்வர் தலைமையில், இன்று நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, ஆசிரியர் நியமன விவகாரத்தில், தமிழக அரசு எவ்வித முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறது. ஆனால், சட்டசபையில், 30 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் காலம் கடத்தினால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். ஆகையால், முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில், தமிழக அரசு உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த தகவல்களை, பொதுமக்கள் எளிதில் பெறுவதற்காக, அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா, அண்மையில் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு இணையதளத்தில், இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. "அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தேவையான, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியை, இந்த அமைப்பு, வெளிப்படையான முறையில் செய்து வருகிறது" என, செயலர் தெரிவித்துள்ளார். இதனால், போட்டித் தேர்வுகள் மூலம், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில், இன்று அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. இதில், ஆசிரியர் நியமனக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், 16,549 பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்யும் முறை குறித்தும், இன்று முடிவெடுக்கப்படுகிறது.