பாடப்புத்தகங்களின் விலை அதிகரிப்பு? மாணவர்கள் பரிதவிப்பு
காகிதத்தின் விலை கடந்த 18 மாதங்களில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாடு முழுவதிலும் உள்ள 5 கோடி பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதிக்கும் என்று இந்திய பாடப்புத்தக வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டமைப்பின் துணைத்தலைவர் சவ்ரப் குப்தா கூறுகையில், ‘காகிதத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அனைத்து பாடபுத்தகங்களுக்கும் நான்கு சதவீத மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்த புத்தகம் அச்சிட்டாலும், அவற்றின் அடக்க மதிப்பு மட்டுமே புத்தகத்தின் விலையில் 80 முதல் 90 சதவீதமாகிறது. காகிதத்தின் விலை 10 சதவீதம் உயர்ந்தால், சில்லரை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை கணக்கிடும்போது புத்தகத்தின் விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டியிருக்கும். எனவே காகித விலையை கட்டுப்படுத்தக்கோரி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதிற்கு எந்த பதிலும் இல்லை“ என்று தெரிவித்தார்.