‘யாரும் பின்னடையவே கூடாது’; முதல்வர் ஆசை
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ள 482 எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் செப்., 30ம் தேதி நடந்தது. பணி நியமன உத்தரவுகளை வழங்கி தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் பின்னடைவு இடங்களில் 482 பேர் நியமன ஆணை பெற்று அரசு கல்லூரிகளுக்கு செல்பவர்களை வாழ்த்துகிறேன். பொதுவாக இந்த சமுதாயத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பிரச்னை எழுந்தபோது, பின்தங்கிய மக்கள், முன்னேறிய மக்கள் என்று தான் பகுத்துக் கூறப்படுவது வழக்கம். ஏதோ அவர்களாகவே பின்தங்கிவிட்டதைப் போல, பின்தங்கியதற்கான குற்றம் அவர்கள் மீதே சுமத்தப்பட்டது. திராவிட இயக்கம் வந்த பிறகு, என்னைப் போன்றவர்கள் விளக்கிப் பேச ஆரம்பித்தோம். அவர்கள் தாங்களாக பின்தங்கியவர்கள் அல்ல; வேறு யாராலோ பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உண்மையை நாடும், சமுதாயமும் உணர வேண்டும் என்பதற்காக, பின்தங்கியவர்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினோம். பின்னடைவிலே இருப்பவர்களை முன்னேற்றுகின்ற நிலைமை தொடரக் கூடாது. ஏனென்றால், யாரும் பின்னடையவேக் கூடாது. பின்னடைந்தால் தானே பிறகு அவர்களை முன்னேற்றுகின்ற பிரச்னை எழப்போகிறது. பிற்படுத்தப்பட்டவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், யார் இவர்களை தாழ்த்தியது என்ற கேள்வி எழும். அப்படி தாழ்த்தியவர்களுக்கு என்ன தண்டனை? யார் இவர்களை பின்தங்கச் செய்தது என்ற கேள்வி எழும். தண்டனையை அவர்களுக்கு கொடுப்பதை விட வேலை வாய்ப்புகளில், கல்வியில், உலகத்திலே இருக்கிற முன்னேற்றங்களில் பங்கு பெற்று அவர்களை வேடிக்கை பார்க்கச் செய்கின்ற அந்த ஒரு நிலை தான் நாம் அவர்களுக்கு தருகின்ற தண்டனை. இவ்வாறு கருணாநிதி பேசினார். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.