‘சவாலை சந்தித்தால் குறிக்கோளை அடைய முடியும்’
கோவை: ‘கற்பனைக்கு எட்ட முடியாத சவால்களை சந்தித்தால், வாழ்வில் குறிக்கோளை அடைய முடியும்’ என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கோவை பி.எஸ்.ஜி.ஆர்., மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் ‘ப்ரீஸ்டைன் 08’ என்ற சர்வதேச கருத்தரங்கம் செப். 30ம் தேதி நடந்தது. இதில், சிங்கப்பூர் ஹெவ்லெட் பேக்கார்ட் ஏசியா பசிபிக் நிறுவனத்தின் இயக்குனர் (சப்ளைஸ் பிசினஸ்) விஸ்வநாத் பேசியதாவது: உலகம் முழுவதும் மாற்றம் என்பது பொதுவானது. இன்றைய உலகில் போட்டி, கற்பனைக்கு எட்ட முடியாத சவால்கள் அதிகம் உள்ளன. அறிவுத்திறனை மேம்படுத்தினால் மட்டுமே குறிக்கோளை அடைய முடியும். இணையத்தளத்தில் இருந்து 20 சதவீதம் பேர், பாடல்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இசைத்துறையும் பல வித மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதுவரை 400 கோடி பாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் இரண்டு கோடி பாடல்கள் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. போக்குவரத்து துறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒன்பது ஏர்லைன் நிறுவனங்கள் மிகக்குறைந்த கட்டணத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு விமானச் சேவை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 270 கோடி பேர், கூகுள் என்ற தேடுதளத்தை பயன்படுத்துகின்றனர். புதிதாக வேலை வாய்ப்பு பெறும் மாணவர்கள், சம்பளத்தை மட்டும் பார்க்க கூடாது. அந்த பணியில் இருந்து நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். எதைச் செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறு விஸ்வநாத் பேசினார். இக்கருத்தரங்கில் கல்லூரி செயலாளர் நந்தினி, முதல்வர் யசோதா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.