தஞ்சையில் பள்ளிக்கு விதிமுறைகளை மீறி சான்று
தஞ்சாவூர்: தஞ்சையில், அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிக்கு விதிமுறை மீறி தீயணைப்புத்துறை சான்று வழங்கியுள்ளது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு, கோட்ட அலுவலருக்கு கலெக்டர் பாஸ்கரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால், தீயணைப்புத்துறையினர் கடும் கலக்கம் அடைந்துள்ளனர். தஞ்சை மேலவீதியில், கொங்கணேஸ்வரர் ஸ்வாமி கோவில் வளாகத்தில் ஸ்ரீ கொங்கணேஸ்வரா வித்யாசாலா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 190 மாணவர், 125 மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி கோவில் வளாகத்தில் பல ஆண்டாக இயங்குகிறது. இப்பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது என, புகார் எழுந்தது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி, கொங்கணேஸ்வரா பள்ளியில் பாதுகாப்பு வசதி குறித்து 2012 ஃபிப், 29ம் தேதியன்று, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் ஆர்.டி.ஓ., காளிதாஸ், தாசில்தார் முருகதாஸ், தஞ்சை நகர உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பரமசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில், "பள்ளியில் கழிப்பிட வசதி உட்பட அடிப்படை வசதி ஏதுமில்லை; பாதுகாப்பு குறைவாக உள்ளது" என, வெளிப்படையாகவே, ஆட்சியர் பாஸ்கரன் அன்றைய தினமே (29ம் தேதி) உயர்நீதிமன்ற கிளைக்கு அறிக்கை அளித்தார். தஞ்சை கலெக்டர் பாஸ்கரனுக்கு, ஸ்ரீ கொங்கணேஸ்வரா பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் முருகேசன், கடந்த மார்ச் மாதம் 7ம் தேதியன்று புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது:தஞ்சையில் மேலவீதியில் கோவில் பிரகாரத்தில் இயங்கி வரும் கொங்கணேஸ்வரா வித்யாசாலா பள்ளியில், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் உரிய கட்டிடமின்றி, கழிப்பிட வசதியின்றி இயங்குகிறது. இந்நிலையில், இப்பள்ளியை நேரில் ஆய்வு செய்யாமலும், அரசாணையை மதிக்காமலும், பள்ளி குழந்தைகள் நலன், பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமலும் தஞ்சை நகர தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சுந்தர், பள்ளிக்கு தடையில்லா சான்றை கடந்தாண்டு அக்., 4ம் தேதி வழங்கியுள்ளார். எனவே தீயணைப்பு துறையின் சான்றை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விதிமுறைக்கு முரணாக சான்று வழங்கியது குறித்து பள்ளியில் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு, தஞ்சை கோட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில், கோட்ட அலுவலர் அறிவுறுத்தல்படி உதவி கோட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, கடந்த 5ம் தேதி, மேலவீதியிலுள்ள கொங்கணேஸ்வரா பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தினார். மேற்கண்ட ஆய்வு குறித்து உதவிக்கோட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் கோட்ட அலுவலர் அறிவுரைப்படி பள்ளியில் பாதுகாப்பு வசதி மற்றும் தீயணைப்புத்துறை விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? தடையில்லா சான்று பெற தகுதியுள்ளதா? என நேரில் ஆய்வு செய்தேன். இதன் அறிக்கையை கோட்ட அலுவலரிடம் விரைவில் தரவுள்ளேன்," என்றார். தஞ்சை கோட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், "பள்ளிக்கு தீயணைப்புத்துறை சான்று பெற என, விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி, பள்ளியில் நான்கு திசைகளிலும் அவசர காலத்தில் வெளியேற வாசல் இருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் பொருத்த வேண்டும் என, விதிமுறை உள்ளது. இதன்படி மேற்கண்ட பள்ளிக்கு தடையில்லா சான்று, முறைப்படி ஆய்வு நடத்தி வழங்கப்பட்டதா? என, நேரில் ஆய்வு செய்து, விதிமுறையை மீறி சான்று வழங்கியிருந்தால் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். தஞ்சையில் உள்ள பள்ளிக்கு நேரில் செல்லாமல், விதிமுறை மீறி தீயணைப்புத்துறையினர் சான்று வழங்குவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆட்சியர் மற்றும் கோட்ட அலுவலர் ஆகியோர் அதிரடி நடவடிக்கையால், தீயணைப்புத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.