கால்பந்து போட்டியில் எம்.சி.சி., அணி வெற்றி
சென்னை: கல்லூரி அளவிலான கால்பந்து போட்டியில், மெட்ராஸ் கிறிஸ்த்தவ கல்லூரி (எம்.சி.சி.,) அணி வெற்றி பெற்றது. சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், சென்னை மாவட்ட கால்பந்து ஆதரவுடன் கல்லூரி கால்பந்து போட்டி, கேளம்பாக்கத்தில் நடந்து வருகிறது. அதில், இந்துஸ்தான் அணி 1-0 என்ற, கோல் கணக்கில், லயோலா அணியை வென்றது. எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியும், எஸ்.ஆர்.எம்., ப்ளூ அணியும், மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. மற்றொரு போட்டியில், எம்.சி.சி., அணியும், தியாகராயா அணியும் மோதின. அதில், எம்.சி.சி., வீரர் சந்தோஷ், ஆட்டம் துவங்கிய எட்டாவது நிமிடத்தில், அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். மீண்டும், 14, 27வது நிமிடங்களில் சந்தோஷ், கோல் அடித்து, ’ஹாட்ரிக்’ அடித்து கலக்கினார். எம்.சி.சி., மூன்று கோல்களுடன் முன்னிலை பெற, தியாகராயா அணி கோல் கணக்கு பூஜ்யமாகவே இருந்தது. எம்.சி.சி., அணி வீரர்கள் மருது 34வது நிமிடத்திலும், பிரகாஷ் 47வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். எம்.சி.சி., அணி வீரர் பிரதாப் 50, 53வது நிமிடத்தில் தொடர்ந்து, இரட்டை கோல் அடித்தார். இதே அணி வீரர், சதீஷ் 55வது நிமிடத்தில் கோல் போட்டார். மீண்டும், அந்த அணி வீரர், மருது 65வது நிமிடத்திலும், பிரதாப் 70வது நிமிடத்திலும், கோல் அடித்தனர். மருது, அவரது நான்காவது கோலை, 75வது நிமிடத்தில் அடித்து அசத்தினார். கடைசி வரை தியாகராயா அணி, கோல் ஏதும் அடிக்க வில்லை. இறுதியில், எம்.சி.சி., அணி, 12-0 என்ற, கோல் கணக்கில், தியாகராயா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.