ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தினமலர் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். செங்கல்பட்டில், 11வது ஆண்டாக, நேற்று ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடந்தது. காலை 8:30 மணிக்கு, நிகழ்ச்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அதிகாலை 4:00 மணிக்கே மாணவ, மாணவியர் திருமண மண்டபத்திற்கு வரத் துவங்கினர். மாணவியர் ஆர்வம்: அதிகாலை செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, செங்கல்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்த அனைத்து பேருந்துகளிலும் இருந்து, மாணவ, மாணவியர் ஆர்வம் பொங்க இறங்கினர். பின் வேகமாக, தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்த, கிருஷ்ணா மஹாலுக்கு விரைந்தனர். காலை 7:30 மணிக்கு, மாணவ, மாணவியர், நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மாணவ, மாணவியருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு, எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள் அடங்கிய புளூ பிரின்ட் புத்தகம், குறிப்பெடுக்க நோட்டு, பேனா ஆகியவை வழங்கப்பட்டன. அனைத்தையும் பெற்றுக் கொண்ட, மாணவ, மாணவியர் வரிசையாக, அரங்கிற்குள் அமர வைக்கப்பட்டனர். காலை 8:30 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி, :தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் உரை, திரையீட்டுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், ஆங்கில ஆசிரியர் முனிராமையா, கணித ஆசிரியர் சுரேஷ், தமிழ் ஆசிரியர் தாயுமானவன், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனீஸ் ஆகியோர், கேள்வித் தாள் வடிவமைப்பு, பொதுத் தேர்வில் கேள்வி கேட்கப்படும் முக்கிய பாடப்பிரிவுகள், கேள்வி வகைகள், விடை அளிக்கும் முறைகள், விடைத்தாளில் பதிவெண் உட்பட முக்கிய விவரங்களை குறிப்பிடும் நடைமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கினர். ஆர்வத்துடன் குறிப்பு: ஆசிரியர்கள் கூறியதை, மாணவர்கள் ஆர்வத்துடன் குறிப்பெடுத்தனர். பகல் 12:00 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி முடிந்தது.தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களை போன்று, பிளஸ் 2 மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அவர்கள், பகல் 12:30 மணிக்கு, அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இயற்பியல் ஆசிரியர் கோபிஆனந்த், வேதியியல் ஆசிரியர் சரவணன், கணித ஆசிரியர் ராஜ், கணினி அறிவியல் ஆசிரியர் ரமேஷ், உயிரியல் ஆசிரியர் சவுந்திர பாண்டியன், கணக்குப் பதிவியல் ஸ்ரீராமன், வணிகவியல் ஆசிரியர் சீனிவாசன், பொருளியல் ஆசிரியர் ரவி ஆகியோர், ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெறுவது எப்படி என விளக்கினர். செய்தி துளிகள்: கிராமப்புறங்களைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவர்கள், அதிகளவில் கலந்து கொண்டனர்.அரங்கம் நிறைந்ததால், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரங்கிற்கு வெளியே நின்றபடி, தங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்களுக்காக குறிப்பெடுத்தனர். ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், மறைமலைநகர், பொன்விளைந்தகளத்துார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பேருந்து, ஆட்டோ, வேன், இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி என, பல வாகனங்களில் வந்தனர். பெண்கள் படித்தால் தலைமுறையே கல்வி பெறும்: தோல்விக்கே இடம் இல்லாத வகையில், பொதுத்தேர்வை, மாணவர்கள் எப்படி எதிர்கொள்வது என்பதற்காகவும், நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும், இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சரியாக சொல்லித் தராதது அல்லது புரியாதது என்பது தான், உங்களுக்கு கஷ்டம். பல மாணவர்களுக்கு, குடும்ப சூழல் காரணமாக, 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பதில் சிக்கல் ஏற்படலாம். இன்றைய சூழ்நிலையில், பிளஸ் 2விற்கு பின், பட்டப்படிப்பும் தேவை என்பது முக்கியம். பலர் குடும்ப சூழல் காரணமாக, வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில், 10ம் வகுப்பிற்கு பின், பட்டயப் படிப்பு படிக்க விரும்புவதாக கூறினீர்கள். பட்டயப் படிப்பு படித்த பின், பொறியியல் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர முடியும். நிகழ்ச்சிக்கு, ஏராளமான மாணவியர் வந்துள்ளீர்கள். முந்தைய தலைமுறையில், பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆண்கள் படித்தால், குடும்பம் முன்னேறும்; பெண்கள் படித்தால் தலைமுறையே கல்வி அறிவு பெற்று, படிக்காதவர்களே இல்லாத நிலை உருவாகும். குடும்ப பின்னணி, கல்வி கற்கும் பயிற்று மொழி போன்றவற்றால், சில மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது; இவற்றை தவிர்க்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றவர்கள், நிறைய சாதனை செய்துள்ளனர். நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவனே. விவசாய குடும்பத்திற்கு தான் தைரியம், துணிச்சல் உண்டு. தாழ்வு மனப்பான்மையை கைவிட வேண்டும். தாய்மொழியில் படிப்பவர்களால்தான், புரிந்து படிக்க முடியும். ஜப்பானியர்கள், ஆங்கிலம் பேச திணறுவர். ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், ரஷ்ய மொழியை முதலில் படிக்க வேண்டும். தமிழ் வழியில் படிப்பவர்களை கிண்டல் செய்பவர்களிடம், தமிழில் படித்து ஜனாதிபதி ஆவேன் என்று கூறுங்கள். பழைய கேள்வி தாள்களுக்கான விடைகளை மட்டுமே அறிந்து மற்றதை ஒதுக்காதீர்கள். அனைத்தையும் படியுங்கள்; தேர்வு அறைக்கு புத்துணர்வுடன் செல்லுங்கள்; கவனத்தை சிதறவிடாதீர்கள்; நேரத்தை வீணாக்காதீர்கள்; காப்பி அடிப்பது கூடாது. குறுக்கு வழியில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். கிராமப்புறத்தில் இருந்து, அதிக மாணவர்கள் வந்துள்ளீர்கள். நாம் ஜெயிக்க பிறந்தவர்கள். இவ்வாறு, அவர் பேசினார்.