உள்ளூர் செய்திகள்

பரிதாபமான நிலையில் பெரும்பாலான அரசு நுாலகங்கள்

புதுச்சேரி: நுாலகர்கள் இல்லாததால், பெரும்பாலான அரசு நுாலகங்கள் பரிதாபமான நிலையில் உள்ளன. பொதுமக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் நுாலகங்களை அரசு திறந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும், 84 கிளை நுாலகங்கள் அமைந்துள்ளன. இந்த நுாலகங்கள் அனைத்தும், கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஒவ்வொரு கிளை நுாலகத்தையும் நிர்வகிப்பதற்கு, நுாலகத் தகவல் உதவியாளர் தேவை. ஆனால், மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 84 கிளை நுாலகங்களில், 54 நுாலகத் தகவல் உதவியாளர் பதவிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள 54 நுாலகங்களில், 37க்கு, நுாலகத் தகவல் உதவியாளர்கள் இல்லை. இதனால், 54 நுாலகங்களை, 17 நுாலகத் தகவல் உதவியாளர்களே கவனிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கிளை நூலகம் ஒன்றில் பயன்படுத்தப்படாமல் பண்டல், பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன புத்தகங்கள். இதற்கு, பெரும்பாலும் எழுத்துப்பூர்வமான உத்தரவும் கிடையாது. வாய்மொழி உத்தரவு அடிப்படையில், கூடுதல் பொறுப்பை கவனிக்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட நுாலகங்களுக்கு சென்று, பலர் பணிகளை சரியாக கவனிப்பது கிடையாது. கலை பண்பாட்டுத் துறையால் கொள்முதல் செய்யப்படும் புத்தகங்கள், ஒவ்வொரு கிளை நுாலகத்துக்கும் பிரித்து அனுப்பப்படுவது வழக்கம். இந்த புத்தகங்கள், பல நுாலகங்களில் பிரிக்கப்படாமல், கரையான் அரித்து, புழுதி படிந்து, பண்டல் பண்டல் குவிந்து கிடக்கின்றன. மேலும், புத்தகங்களை வகைப்படுத்தி அடுக்குவது உள்ளிட்ட பணிகளும் ஸ்தம்பித்துள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதில்லை. ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு புத்தகங்கள் தரப்படாத அவலமும் அரங்கேறி உள்ளது. பல நுாலகங்களில், புத்தகங்கள் காட்சிப் பொருளாக அலமாரிகளில் துாங்கிக் கொண்டுள்ளன. நுாலகத்தில் இருந்து புத்தகத்தை எடுத்துச் சென்று, திருப்பி தராதவர்களுக்கு, கடிதம் எழுதி கேட்பதும் கிடையாது. இதனால், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் மாயமாகி உள்ளன. இதுபோன்ற காரணங்களால், பெரும்பாலான கிளை நுாலகங்கள் மோசமான நிலையில், பெயரளவுக்கு மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன. எதற்காக நுாலகம் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. நுாலகத் தகவல் உதவியாளர் பதவிகள் அனைத்தையும் நிரப்பவும், நுாலகங்களை நல்ல முறையில் பராமரிக்கவும், போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்