காசோலை வழங்குவதில் அரசு பள்ளிகள் குழப்பம்!
சேலம்: தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு அவசர அவசரமாக பெஞ்ச், டெஸ்க் வினியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், 7 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்குவது குறித்து, தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த, 2012-13ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 344 உயர்நிலை பள்ளிகளுக்கும், 2012-13ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 552 உயர்நிலைப்பள்ளிகளுக்கும், தற்போது அவசர அவசரமாக தலா, ஏழு லட்ச ரூபாய் மதிப்பிலான பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான காசோலையை, பள்ளி தலைமை ஆசிரியர்களே, தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தலைமை ஆசிரியர்கள் இந்த காசோலை வழங்குவதால், சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில், ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வதில்லை. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே, பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள, வங்கி மூலம் பணம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பணத்தில், தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக பொருட்களை வாங்கிவிட முடியாது. அதிகாரிகளின் வாய்வழி உத்தரவின்படி, குறிப்பிட்ட தனியார் நிறுவனம் சப்ளை செய்யும் பொருட்களை வாங்கிக்கொண்டு, கேள்வி கேட்காமல், ஏழு லட்ச ரூபாய் காசோலையை வழங்க வேண்டும். தேர்தல் விதிமுறைகள் அமலான பின், அவசர அவசரமாக பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், காசோலை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இதன் முழு பொறுப்பும் தலைமை ஆசிரியரை சார்ந்தது என்பதால், பிரச்சனை வரும் போது, அதிகாரிகள் நழுவிக்கொள்ள வாய்ப்புள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள போது, அரசு நிதியான, ஏழு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்குவதா என்பது குறித்து, எவரிடமும் தெளிவான பதில் இல்லை. இக்குழப்பத்துக்கு தேர்தல் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.