’சைபர்’ குற்றம் குறித்து மாணவர்களுக்கு போதனை
கோவை: போலீசாரின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளவும், சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கோவை மாநகர போலீசில், உங்கள் போலீசை அறிந்து கொள்ளுங்கள் திட்டம் துவக்கப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், 15 சட்டம் - ஒழுங்கு, 15 குற்றப்பிரிவு மற்றும் மூன்று அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீஸ், கட்டுப்பாட்டு அறை, சிறப்பு புலனாய்வு பிரிவு உள்பட பல்வேறு போலீஸ் பிரிவுகள் செயல்படுகின்றன. இந்நிலையில், போலீசாரின் தினசரி செயல்பாடுகள், பிரிவுகள் மற்றும் கட்டமைப்புகளை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கோவை மாநகர போலீசில், உங்கள் போலீசை அறிந்து கொள்ளுங்கள் என்ற திட்டம் துவக்கப்பட உள்ளது. இதற்காக முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் உள்ளிட்டோருடன் கலந்தாலோசனை நடத்தும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது: பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் போலீஸ் துறை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இதனால், போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படும். போலீசார் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கையாளும் முறை, குற்ற வழக்குகளில் துப்பு துலங்குவது எப்படி, போலீஸ் துறையில் உள்ள பிரிவுகள் போன்ற அடிப்படை விஷயங்களை மாணவர்கள் அறிந்து கொண்டால், அவர்களது கடமைகளை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். இதை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்காக, உங்கள் போலீசை அறிந்து கொள்ளுங்கள் என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, கோவையிலுள்ள பள்ளி மாணவர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறை செயல்பாடு, மோப்பநாய் பிரிவு, போலீஸ் ஸ்டேஷனின் தினசரி செயல்பாடுகளை நேரடியாக பார்வையிடலாம். இதற்காக, தினமும் இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்படும். மாணவர்கள், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டு, இன்ஸ்பெக்டரின் தினசரி பணி, முதல் தகவல் அறிக்கை, புகார்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ரோந்துப் பணி, போக்குவரத்து, கோர்ட் சம்மன், லாக்-அப், துப்பாக்கிகள், கைதிகள் பாதுகாப்பு குறித்து நேரடி விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்படும். குறிப்பாக சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறிவு, போதை பொருள் கண்டறிதல் குறித்தும் விளக்கப்படும். எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பள்ளிதோறும், 50 மாணவர்கள் இத்திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்படுவர். விரைவில் இத்திட்டம் துவக்கப்படும். இவ்வாறு, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார்.