அதிக மாணவர்களை அனுப்புவது இந்தியா தான்
ஆனால், அங்கு அறிவியல், இன்ஜினியரிங் உட்பட பல படிப்புகளில் சாதிப்பது என்னவோ சீனா தான். அமெரிக்காவில், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப, சமீப ஆண்டுகளில் அதிக அளவில் மாணவர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதிலும் இந்தியாவுக்கு சவாலாக இருப்பது சீனா தான். பொறியியல், அறிவியல் இரண்டிலும் மேற்படிப்புக்கு அதிக மாணவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதில், இந்தியாவுக்கு சமமாக சீனா இருந்து வருகிறது. ஆனால், சமீப ஆண்டுகளில் இதிலும், சீனா மிஞ்சி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பொறியியல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் தான். அதே சமயம், பொறியியல் படிப்புகளில் ஆராய்ச்சி செய்வதிலும், டாக்டர் பட்டம் பெறுவதிலும் சீன மாணவர்கள் தான் முன்னணியில் உள் ளனர் என்று தெரியவந்துள்ளது. பொறியியல் மட்டுமின்றி, அறிவியல் படிப்புகளில் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டது. இந்தியாவை விட, இரண்டரை மடங்கு அதிகமாக சீன மாணவர்கள் அமெரிக்காவில் இந்த படிப்புகளில் படிக்கின்றனர். அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சீனர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். இந்திய அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இது தொடர்பாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க கடந்த 1998ல் இந்தியாவில் இருந்து 26 ஆயிரம் மாணவர்கள் சென்றனர் அப்போது, அமெரிக்கா சென்ற சீன மாணவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரம். ஆனால், 2005ல், இரு நாடுகளும் சம அளவில் மாணவர்களை அனுப்பி வைப்பதில் போட்டி போட்டன. கடந்த 2007ல், அமெரிக்காவுக்கு சென்ற இந்திய மாணவர் கள் எண்ணிக்கை 85 ஆயிரம்; சீனாவில் இருந்து சென்ற மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த அளவுக்கு போட்டாபோட்டி வலுத்தது. கடந்த 1985 முதல் 2005 வரை, அமெரிக்காவில், பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள் எண் ணிக்கை 8,100 அதே சமயம், சீன மாணவர்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 12 ஆயிரம் பேர். அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற இந்தியர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 800; சீன மாணவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரம்.அதாவது, பொறியியல் மாணவர்களை அதிகம் அனுப்புவது இந்தியா தான் ஆனால், தகுதி சார்ந்த பட்டங்கள் பெறுவதில் சீன மாணவர்கள் முதலிடம் அதுபோல, அடிப்படை அறிவியலிலும் அதிகம் சாதிப்பது சீனர்கள்தான். இதற்கு காரணம், அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கப்போகும் அளவுக்கு மாணவர்களை தகுதிப்பெறச் செய்வதில் இந்தியாவை விட, சீனா தான் அதிக கட்டமைப்பு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வித் துறையில் தனியார் முதலீடு அதிகம் என்பதும் முக்கிய காரணம். இது, இன்று நேற்றல்ல, 30 ஆண்டாகவே கல்வித்துறையில் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி வந்துள்ளது. அதனால், தகுதி வாய்ந்த படிப்புகளை முடித்த சீன மாணவர்கள், முழு தகுதியுடன் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் செல்கின்றனர் அவர்களால் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட முடிகிறது. நானோ டெக்னாலஜி, பயாலஜி உட்பட பல அறிவியல் துறைகளில் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சீன மாணவர்கள் தான் தொ டர்ந்து சாதித்த வண்ணம் உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா இப்போது தான் கல்வித்துறையில், அதிலும் அறிவியல் துறையில் முழு அக்கறை காட்டி, பல திட்டங்களை போட்டு, மாணவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது. புதிய ஐ.ஐ.டி.,க்கள் உருவாகி உள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இதன் பலன்கள் கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.