அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் ரத்து, இலவச சைக்கிள், இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட சலுகைகளுக்கு, பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனாலும், இம்மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொள்வதில், பல்வேறு தடங்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தான் வருகிறது. கற்பிக்கப்படும் கல்வி உரிய முறையில் சேர, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியே ஆர் வம் உருவாக வேண்டும். பல மாணவர்களுக்கு இந்த ஆர்வத்தை கெடுக்கும் விதமாக அடிப்படை வசதியின்மை அமைந்து விடுகிறது. உதாரணமாக, காலையில் உணவு எடுத்துக் கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவனால், உற்சாகமாகவும், ஆர்வத்தோடும் பாடத்தை கற்றுக் கொள்ள முடியாது. இந்த இடர்பாடுகளை உணர்ந்து, திருச்சி அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு காலையில் டிபன வழங்கப்படுகிறது. திருச்சி நகரில் சமுதாய காலை உணவு திட்டம் என்ற பெயரில், பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியோடு, 34 பள்ளிகளில் காலையில் டிபன் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, குமலூர் டயட் மைய முதுநிலை விரிவுரையாளர் சிவகுமார் கூறியதாவது: டயட் மைய விரிவுரையாளராக, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி குழந்தைகளுக்கு, கற்றல் அடைவுகளில் உள்ள சிக்கல்களை தெரிந்து கொள்ள, பல பள்ளிகளில் ஆய்வு செய்தோம். அதில், அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் என்பதும், வறுமையின் காரணமாக பல குழந்தைகள் காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வருவதும் தெரியவந்தது. காலையில் உணவு சாப்பிடாமல் இருப்பதால், குழந்தைகள் மிகவும் சோர்ந்து விடுகின்றன. இதனால், படிப்பில் ஆர்வம் குறைவதும், அதனால் பள்ளியில் இடைநிற்பது அதிகரிப்பதும் தெரியவந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக, பொதுமக்கள் உதவியுடன் 2007ம் ஆண்டில், திருச்சி தஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளியில், சமுதாய காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. இதில், வறுமையில் வாடும் 100 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, காலையில் இட்லி, பொங்கல், வெரைட்டி சாதம் என, டிபன் வழங்க துவங்கினோம். பின்பற்றி, இன்று 34 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்குழந்தைகளுக்கு நன்கொடையின் மூலம் காலை டிபன் வழங்கி வருகின்றனர். இதற்கு ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட சங்கங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்களது பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில், தங்களது பங்களிப்பை அளிக்கின்றனர். இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பரவலாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு சிவகுமார் கூறினார். இதே குறிக்கோளை பின்பற்றி, புதுச்சேரி அரசு, பள்ளிகளில் காலை உணவாக ரொட்டியும், பாலும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.