உள்ளூர் செய்திகள்

அறிவியல், கணித பாடங்களுக்கு அமோக வரவேற்பு

சமச்சீர் கல்வி கருத்தரங்கில் ஆசிரியர்கள் கருத்து சமச்சீர் கல்வி வரைவு பாடத்திட்டத்தில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆசிரியர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆங்கில பாடத்தில் உச்சரிப்பு முறைக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும், கடினமாக உள்ள சமூக அறிவியல் பாடத்தை எளிமையானதாக மாற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 20102011 ம் கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.   புதிய பாடத்திட்டத்தின் வரைவு பாடத்திட்டம் பள்ளிக் கல்வி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு பாடத்திட்டம் பற்றிய ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை அறிய நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கோவையில் பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்தரங்குக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் கல்வியாளர்கள் பேசியதாவது: பிரேம் அதிபன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்: ஒரு நல்ல பாடத்திட்டம் மாணவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதாக இருக்க வேண்டும்.   தாங்களாகவே கற்கத் தக்க வகையில் எளிமையானதாக இருக்க வேண்டும். கற்பதில் சுயமாக ஆர்வத்தை தூண்ட வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டத்தின் நோக்கங்களாக இந்த அம்சங்கள் இருப்பதால், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஆனந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்: முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டத்தைக் கண்டு எவர் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். இளங்கோ, கோவை, நீலகிரி மாவட்டங்களின் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்: மாற்றங்கள் வரும் போதெல்லாம் குழப்பங்கள் வருவது சகஜம். ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை.   கற்கும் திறன் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடுகிறது. கல்வி கற்பதில் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கவும், கற்பதில் சமமான வாய்ப்புகள் கிடைக்கவும் இக்கல்வித் திட்டம் உதவும். இந்திராணி, அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி: சமச்சீர் கல்வி முறை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. மெட்ரிக் பாட முறையில் அறிவு மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. மாணவர்களின் வயது, கற்கும் திறனுக்கேற்ப மதிப்பீடு முறை தேவை.   சமச்சீர் கல்வித் திட்டம் இந்த தேவைகளை பூர்த்தி செய்யும். இவ்வாறு, கல்வியாளர்கள் பேசினர். இதன் பின் பாட பிரிவுகளின் அடிப்படையில் அனைத்து ஆசிரியர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அந்தந்த பாடங்களை படித்து நிறை, குறைகளை விவாதித்தனர். இவர்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் மொத்தமாக தொகுக்கப்பட்டு நேற்றிரவு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   ஆசிரியர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றி டயட் முதல்வர் பிரேம் அதிபன் கூறியதாவது: வரைவுப் பாடத்திட்டத்தில் கணிதம், அறிவியல் பாடங்கள் மிக சிறப்பாக இருப்பதாக அனைத்து ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் வகுப்பு தமிழ் பாடத்தில் சில மாற்றங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில பாடத்தில் உச்சரிப்பு முறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தேவை என்றும் பாடத்திட்டத்தில் உள்ள அதே உச்சரிப்பு முறையின்படி தேர்வு வினாத்தாள்களையும் தயாரிக்க வேண்டும் என கூறியுள்ளனர். சமூக அறிவியல் பாடம் சிறிது கடினமாக இருப்பதாகவும், எளிமைப்படுத்தி நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.   தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று(நேற்று) சேகரிக்கப்படும் இது போன்ற கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு சேர்த்தல், நீக்குதல் நடைபெறும். அதன் பின் ஜனவரியில் பாடப் புத்தககம் அச்சிடும் பணி துவங்கும் இவ்வாறு, பிரேம் அதிபன் கூறினார். கருத்தரங்கில் மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷிணி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் மற்றும் ஆசிரியர்கள், முதல்வர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்