உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு காலணி; டெண்டர் எதிர்த்து மனு

சென்னை: பள்ளி மாணவ மாணவியருக்கு காலணி வழங்குவதற்கான டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு பாடநுால் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியை சேர்ந்த பி.என்.ஜி. பேஷன் கியர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு: பள்ளி குழந்தைகளுக்கு பை காலணி கொள்முதல் செய்து வழங்கும் பொறுப்பு பாடநுால் கழகத்துக்கு உள்ளது. காலணி கொள்முதல் செய்ய பாடநுால் கழகம் டெண்டர் கோரியது. இதில் எங்கள் நிறுவனம் பங்கேற்றது. டெண்டரில் தகுதி பெற்றதாக எங்களை அறிவிக்கவில்லை; அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை.மாணவியருக்கான ஷூ விலையை பேட்டா நிறுவனம் குறிப்பிட்டிருந்த விலைக்கும் குறைவாக எங்கள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் எங்களை நிராகரித்து விட்டனர். நிராகரித்ததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அனைத்து நிபந்தனைகளையும் எங்கள் நிறுவனம் பூர்த்தி செய்திருந்தது. டிசம்பரில் ஹரியானாவை சேர்ந்த பேட்டா நிறுவனம் மற்றும் டில்லியை சேர்ந்த பவர்டெக் நிறுவனத்தின் டெண்டரை ஏற்பதாக பாடநுால் கழகம் கடிதம் அளித்தது. டெண்டர் நிபந்தனைகளை பின்பற்றாமல் விருப்பத்துக்கு ஏற்ப டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. எனவே டெண்டரை ஏற்பதாக பாடநுால் கழகம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். டெண்டரில் தேர்ச்சி பெற்றதாக எங்கள் நிறுவனத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு பதில் அளிக்கும்படி பாடநுால் கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்