பல்கலை., கல்வியாளர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்வியாளர்களுடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆலோசனை நடத்தினார்.தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்தை முன்னோடி மாநிலமாக மாற்றப்படும் என்றார். புதுச்சேரியில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், தொழிலதிபர்கள், தொழில் கூட்டமைப்பினரை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். அப்படியே பா.ஜ.,தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து ஆலோசனைகளை பெற்று வருகிறார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சென்றார். அவரை பல்கலை., துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்றார். பல்கலைக்கழக இயக்குனர்கள், டீன்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநில கல்வி வளர்ச்சி வழிமுறைகள் குறித்து கல்வியாளர்கள் எடுத்துரைத்தனர். இந்த ஆலோசனைகளை எழுத்து பூர்வமாக அளிக்கும்படி கேட்ட, மத்திய அமைச்சர், தொழிற்சாலை சார்ந்த கல்வி, இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.