உள்ளூர் செய்திகள்

‘குழந்தைக்கு ஆர்வமுள்ள துறையில் வழிகாட்ட வேண்டும்’

கோவை: “குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அத்துறையில் முன்னேற தேவையான வழிகாட்டல்களை பெற்றோரும் ஆசிரியர்களும் வழங்க வேண்டும்,” என்று மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., பிரமோத்குமார் கூறினார். ‘தி இந்து’ நாளிதழின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 230 மாணவ மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். ஏர்போர்ஸ் பள்ளி ஓவிய ஆசிரியர் ராஜன் மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளி ஓவிய ஆசிரியை நிர்மலா ஆகியோர் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தனர். சீனியர் மாணவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 3,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாயும் வழங்கப்பட்டன. ஜூனியர் மாணவர்களுக்கு முதல் பரிசாக 3,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 2,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாயும் வழங்கப்பட்டன. இதைத் தவிர ஏழு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரமோத் குமார் பேசுகையில், “எந்த துறையில் பணிபுரிந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்க வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு பெற்றோர் மதிப்பு கொடுக்க வேண்டும். தங்களைப் போலவே டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என வற்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். எந்த துறையில் குழந்தைகள் அதிக திறனுடன் விளங்குகிறதோ, அந்த துறையில் முன்னேற தேவையான வழிகாட்டல்களை பெற்றோர் வழங்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்லாமல் பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளின் திறன் அறிந்து, அதை மேலும் வளர்க்க உதவ வேண்டும். தங்கள் கனவுகளை பிள்ளைகளிடம் வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது,” என்றார். கடும் மழை, நிலச்சரிவின் இடையேயும் நேற்றைய போட்டியில் பங்கேற்ற ஊட்டி வெல்லிங்டன் ராணுவ பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் சரோஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்