ஜெயித்துக் காட்டுவோம்: குவிந்த மாணவ, மாணவியர்
காலை மற்றும் மதியம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக அதிகாலை 5.30 மணியில் இருந்தே மாணவ, மாணவியர் அரங்கை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் 19 பள்ளிகளைச் சேர்ந்த, 4,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் காலையிலும், மேலும் 46 பள்ளிகளைச் சேர்ந்த 4,200க்கும் மேற்பட்டவர்கள் மதியமும் வந்தனர்.இவர்கள் தேர்வை எதிர்கொள்ள, பாடங்களுக்கான மதிப்பெண் விவரம், எந்தெந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட குறிப்புகள் அடங்கிய, ப்ளு பிரின்ட் புத்தகம், குறிப்பு எடுப்பதற்கான நோட்டு புத்தகம் உள்ளிட்டவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில், லிட்டில் ஸ்பேஸ் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட மாணவனின் குறும்படம் காட்டப்பட்டது.அறிவியல் பாடத்தை ஆசிரியர் ஆனந்தனும், கணிதப் பாடத்தை கேசவனும் எடுத்தனர்.தொடர்ந்து காலை, மதியம் இருவேளைகளிலும் மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களையும் ஆசிரியர்கள் நடத்தினர். இடையிடையே, மாணவர்கள் தங்களை எப்படி தேர்வுக்கு தயார் செய்து கொள்வது என நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.அரங்கம் முழுவதும் மாணவர்கள் கூட்டம் நிரம்பியதால், பல மாணவ, மாணவியர் மேடையிலும் உட்கார வைக்கப்பட்டனர்.சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் சேதுராம வர்மா, உதவிக் கல்வி அலுவலர்கள் சந்திரசேகர், பீர் முகமது, சாமுண்டி, ரவிச்சந்திரன் மற்றும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்த 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.