உள்ளூர் செய்திகள்

ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை மனு

குளித்தலை: கரூரில்  வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுபியுள்ளார்.கோயம்புத்துார் மண் மற்றும் பயிர் மேலாண்மை மைய தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர் வளையப்பட்டி ஜெயராமன், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாய அமைப்பு தலைவர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு புதிய வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு தமிழக அரசு அறிவிப்பு செய்தது. மேலும், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கல்லுாரி செயல்படுவதற்கு, 100 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கரூரில் உள்ள சமுதாய கூடத்தில், போதிய இடவசதி இல்லாததால் வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குளித்தலை பகுதியில் மண் வளம், நீர் வளம் உள்ள இனுங்கூரில் மறைந்த முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்த மாநில விதைப்பண்ணை உள்ளது. இது, 230 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது, 60 ஏக்கரில் மட்டுமே நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மையத்தின் அருகில் கட்டளை புதிய மேட்டு வாய்க்கால், கட்டளை பழைய மேட்டு வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்கால் வசதிகள் உள்ளன. மீதமுள்ள, 150க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முற்செடிகள் வளர்ந்துள்ளன. இங்கு வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. மேலும் வேளாண்மை கல்லுாரி மாணவிகள் நன்கு பயிலும் வகையில் இந்த மையத்தில், 10 கி.மீ. சுற்றளவில் திருச்சி மாவட்டம் சிறுமணியில் கரும்பு ஆராய்ச்சி மையம், அதவத்துாரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், கரூர் மாவட்டம் புழுதேரியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம், முதலைப்பட்டியில் மாவட்ட தோட்டக்கலை துறை செயல்பட்டு வருகிறது. எனவே, அனைத்து வசதியும் கொண்ட மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின், முதல் தொகுதியில் வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்