ஒரே பாடத்திட்டம்: ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்: தமிழக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தை திரும்பப் பெறக் கோரி கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) சார்பில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு உயர் கல்வி மாமன்றத்தின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரே பொதுப் பாடத்திட்டம் என்பது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையைப் பாதிப்பதாக உள்ளது. ஒரே பாடத்திட்டம் என்பதை கைவிட்டு தரமான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மாலை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பூமா வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திலக்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் கிளை தலைவர் ரவி வரவேற்றார். பல்கலைகழக சங்க தஞ்சை மண்டல தலைவர் கோகுல கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக கடலுார் மண்டல செயலர் தண்டாயுதபாணி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மகேசன், சக்கரவர்த்தி, குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தஞ்சை மண்டல பொருளாளர் ஸ்ரீதர் தங்கதுரை நன்றி கூறினார். பொதுப் பாடத் திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.