அரசு பள்ளியில் நேர்மையாளர் கடை துவக்கம்
எழுமலை: எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேர்மையாளர் கடையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.கருமாத்துார் புனிதகிளாரட் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருளுக்குரிய உரிய பணத்தைப் போட்டு, பொருளை எடுத்துக் கொள்ளும் நேர்மையாளர் கடை செயல்படுகிறது. இதே போன்ற கடை எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளியல் பிரிவு வகுப்பறையில் நேற்று துவக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் ஜீவரத்தினம் வரவேற்றார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ஜெயக்குமார் கடையை திறந்து வைத்தார்.கருமாத்தூர் புனித கிளாரட் பள்ளி தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம், விவேகானந்தா பள்ளித் தாளாளர் சிவானந்தா, மவுலானா மவுலவி ராஜாமுகம்மது, ஞானதீபம் கல்விக்கழகத் தலைவர் பெருமாள், விஸ்வ வித்யாலயா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் அருள்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கோபி, மேலாண்மை குழு உறுப்பினர் சரண்யா பங்கேற்றனர். பள்ளி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கியவர்களை பாராட்டியதுடன், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.இணை இயக்குநர் ஜெயக்குமார் பேசியதாவது: அரசு பள்ளியில் நேர்மையாளர் கடை துவக்குவது எளிதானதல்ல. மாணவர்கள் உண்மை, ஒழுக்கம், நேர்மையை பின்பற்றுவது என்பது கரடுமுரடான பாதை. ஆரம்பத்தில் நடக்க சிரமமாக இருந்தாலும், தொடர்ந்து நடந்தால் சரியான பாதை கிடைத்துவிடும், என்றார். ஆசிரியர்கள் முத்துக்குமார், விஜயபிரியா, பரமேஸ்வரி, முருகேசன் ஏற்பாடு செய்திருந்தனர்.