நிலவில் ஆய்வு பணிகள் வெற்றிகரமாக நிறைவு
பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலம் மூலம் நிலவுக்கு அனுப்பிய பிரஜ்ஞான் ரோவர் தனது ஆய்வு பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டது. தற்போது உறக்க நிலைக்கு சென்றுள்ளது என இஸ்ரோ சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில், விக்ரம் லேண்டர் சாதனம் சமீபத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதற்குள் இருந்த பிரஜ்ஞான் ரோவர் சாதனம், நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டது. இதுவரை நிலவு தொடர்பான அனைத்து படங்களையும், விக்ரம் லேண்டர் அனுப்பியது. பிரஜ்ஞான் ரோவரை லேண்டர் குழந்தை போல் கண்காணித்து வந்தது. ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம், பிளாஸ்மா ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.14 நாள் ஆய்வு பணி நிறைவுரோவர் தற்போது நிலவில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரஜ்ஞான் ரோவர் இதுவரையிலும் அதற்குக் கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்தது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: பிரஜ்ஞான் ரோவர் தனது ஆய்வு பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டது.ரோவர் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டு, உறக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளது. தரவுகள் அனைத்தும் லேண்டர் வழியாக பூமிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது. அதில் உள்ள சோலார் பேனல் வரும் செப்டம்பர் 22ம் தேதி நிலவில் அந்த இடத்தில் மீண்டும் சூரிய உதயமாகும் போது சூரிய சக்தியைப் பெறும். ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் ஸ்விட்ச் ஆன் ஆகும் என்று நம்புகிறோம். அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.