சொந்த வேலைக்கு மாணவர்களை பயன்படுத்த தடை
சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை, பள்ளி மற்றும் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரு தினங்களுக்கு முன், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் கடை வீதியில் சில மாணவர்கள், பள்ளி வேலை நேரத்தில் சீருடையுடன் சுற்றி திரிந்ததை, அவ்வழியே காரில் சென்ற அதிகாரிகள் கவனித்தனர்.விசாரித்த போது, அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, ஆசிரியர்களால் சில பொருட்கள் வாங்கி வர கடை வீதிக்கு அனுப்பப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், எந்த பள்ளியிலும், தங்களின் சொந்த பணி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்ந்த பணிகளுக்கு, மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.