புத்தகம் வாசியுங்கள்; அறிவை விரிவு செய்யுங்கள்!
திருப்பூர்: வெற்றியையும், முன்னேற்றத்தையும் புத்தகங்கள் தேடித்தரும் என திருப்புர் புத்தகத் திருவிழாவில் பேச்சாளர் ஆண்டாள் பேசினார்.திருப்பூர் புத்தகத் திருவிழாவில், பொன்மொழி யென்னும் புது சூரியன் எனும் தலைப்பில், பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது:பெண்களுக்கு வாழ்வில் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை முக்கியம். விதைகள் மண்ணோடு போராடி தான் மரமாக முளைக்கிறது. இலக்கியங்கள் என்பது இல்லாமல் போனால் தமிழ் எழுத்துகள் என்னவாகும்?பெண்களின் உணர்வுகள் ஒரு பெரிய கடல். உணர்வுகளைக் கவிதைகளாக வெளிக்கொண்டு வந்து, பாராட்டு பெறுவதில் பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிறந்தவராகி வருகின்றனர். கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு கொண்டிருக்கும் ஒருவனை பார்த்துக் கொண்டு, கடந்து செல்பவர்களாக எழுத்தாளர்கள் இல்லை.சமூகத்துக்கு உள்ளதை உள்ளபடி எடுத்துக் கூறுபவர்களாக, உணர்வாளர்களாக உள்ளனர். பூமிக்கும், சமூகத்துக்கும் என்ன தேவை என்பதை அறிந்து, ஆராய்ந்து கவிஞர்கள், எழுத்தாளர்கள் தான் எழுதுகின்றனர்; அரசுக்கே யோசனை கூறுபவர்களாக இருக்கின்றனர். நீங்கள் வாழ்வில் வெற்றி பெற மனதை திறந்து வையுங்கள்; அறிவை விரிவை செய்யுங்கள். புத்தகங்களை வாசியுங்கள். விசாலமான பார்வை, வெற்றியையும், முன்னேற்றத்தையும் புத்தகங்கள் தேடித்தரும்.