ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களுக்கு அறிவுரை
புதுடில்லி: மாணவர் சங்கத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விழிப்புடன் இருக்கவும், பல்கலை வளாகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணவும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவுறுத்தியுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின், அமலுக்கு வந்துள்ளது. இந்த மசோதா 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பார்லி.,யில் நிறைவேறியது. அப்போது, நாடு முழுதும் போராட்டங்கள் நடந்தன.டில்லியில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை உட்பட அனைத்து பல்கலைகளிலும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.இந்நிலையில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வெளியிட்டு உள்ள அறிவிப்பு:பல்கலையில் நடத்தப்பட உள்ள மாணவர் சங்க தேர்தலை கருத்தில் கொண்டு, பல்கலை வளாகத்தில் மாணவர்கள் அமைதியுடன் தங்கள் பணிகளை செய்ய வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்.பல்கலை வளாகத்துக்குள் வன்முறைக்கு திட்டமிடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.