பெரும்பாக்கம் பள்ளி சுவர் ஓவியங்களால் வண்ணமயம்
சென்னை: பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வளாகத்தில், அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இந்த பள்ளி கட்டடம், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக முன்மாதிரியாக கட்டி, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. கட்டடத்தை சுற்றி, 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதில், கட்சி, வீட்டு சுப, துக்க நிகழ்ச்சி போஸ்டர்கள் ஒட்டி, சுவரை நாசப்படுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த சுவரில், வண்ண ஓவியங்கள் வரைய, மைக்ரோ சிப் என்ற நிறுவனம் முன்வந்தது.சுவரில், பாடப்புத்தகம், பேனா, மாணவ - மாணவியரின் குதுாகலம், அப்துல்கலாம், தண்ணீர் சிக்கனத்தை உணர்த்துவது உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்படுகின்றன. கண்கவர் ஓவியமாக இருப்பதால், சாலையில் செல்வோர் சில நிமிடம் நின்று, ஓவியத்தை ரசித்து செல்கின்றனர். மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.