மாநகராட்சி பள்ளியில் ஸ்டெம் ஆய்வகம்
கோவை: கோவை சித்தாபுதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பாக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், 'ஸ்டெம்' ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.மேயர் ரங்கநாயகி நேற்று திறந்து வைத்தார்; மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.சித்தாபுதுார், ரத்தினபுரி, வடகோவை, பீளமேடு, மணியகாரம்பாளையம் மேல்நிலைப்பள்ளிகள், அரங்கநாதபுரம், ராமகிருஷ்ணாபுரம், ஆர்.எஸ்.புரம் மேற்கு, எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குப்பகோணாம்புதுார், அனுப்பர்பாளையம், ராமலிங்கம் காலனி உயர்நிலைப்பள்ளிகள் உட்பட, 15 பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு வாரத்துக்கு ஒன்று முதல் மூன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.இந்த ஆய்வகம் மூலம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவது முதன்மையான நோக்கம். ஐ.சி.டி., பேனல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் அறிவியல், கணிதம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய, 80க்கும் மேற்பட்ட மாதிரிகள் உள்ளன. கருத்தியல் தெளிவை கொண்டு வருவதற்கும், குழந்தைகளுக்கான கற்றல் அனுபவத்தை வளர்ப்பதற்கும் துல்லியமாக இந்த ஆய்வகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.